சென்னை: தமிழகத்தின் 16 நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டிய நிலையில், தற்போது ஈரப்பதம் வாய்ந்த கடல் காற்று தமிழகத்தை நோக்கி வீசத் தொடங்கியுள்ள நிலையில், வெப்பம் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; கடல் காற்று இதுவரை தமிழகத்தை நோக்கி வீசாததால், அதிக வெப்பம் நிலவியது. வேலூர் மற்றும் திருத்தணியில் அதிகபட்சமாக 106 டிகிரியும், திருச்சியில் 106 டிகிரியும், சென்னை நுங்கம்பாக்கத்தில் 105 டிகிரியும், சென்னை விமான நிலையம், மதுரை தெற்கு ஆகிய இடங்களில் 104 டிகிரியும், மதுரை விமான நிலையம், நாகப்பட்டினம், கொடைக்கானல், காரைக்கால் மற்றும் பாளையங்கோப்டை ஆகிய இடங்களில் 103 டிகிரியும், சேலம், கரூர், பரமத்தி வேலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் 102 டிகிரியும், நாமக்கல்லில் 101 டிகிரி மற்றும் பரங்கிப்பேட்டையில் 100 டிகிரி என்ற அளவில் வெப்பம் பதிவானது.

இந்நிலையில், தென்மேற்கு திசையிலிருந்து ஈரப்பதம் மிகுந்த கடல்காற்று வீசத்தொடங்கியுள்ளதால், ஜுன் 2ம் தேதி முதல் வெப்பம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வெப்பச் சலனம் காரணமாக திருவண்ணாமலை, ஈரோடு, வேலூர் மற்றும் தருமபுரி உள்ளிட்ட சில இடங்களில் மழை பெய்யவும் வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், நீலகிரி, திண்டுக்கல் மற்றும் கோவை ஆகிய இடங்களில் இடி, மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் மழை பெய்யலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.