ராஞ்சி:
ல தனியார் மருத்துவமனைகளில் பணம் முழுவதுமாக செலுத்தப்படாத காரணத்தால் நோயாளிகள் அல்லது அவர்களின் உடல்களை தர மறுக்கின்றன, இந்த வழக்கில் நீதிமன்றம் இதனை சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்த போதிலும் இது போன்ற விஷயங்கள் நடந்து வருகின்றன.

கடந்த ஆகஸ்ட் 3 ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவரின் உடலை, முழு பணத்தையும் செலுத்த முடியாத காரணத்தால் பெங்களூரின் தனியார் மருத்துவமனை ஒன்று அவரின் உடலை ஒப்படைக்க மறுப்பதாக அவருடைய மகள் சமூக வலைத்தளத்தில் ஒரு காணொளியை பதிவு செய்திருந்தார்.

ஒரு வாரத்திற்கு முன்பு ராஞ்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 53 வயதான நோயாளியின் உடலை பாதி பணத்தை மட்டுமே செலுத்தியதால் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ஒப்படைக்காமல் வைத்திருந்தனர், மேலும் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் 62 வயதான ரிக்ஷா ஓட்டுநர் ஒருவரின் சடலத்தை முழு பணத்தையும் செலுத்தாத காரணத்தால் கொடுக்க மறுத்துவிட்டனர், இந்த இரண்டு நிகழ்வுகளிலும் உள்ளூர் அரசியல்வாதிகள் சிலர் தலையிட்டு இந்தப் பிரச்சினையை தீர்த்து வைத்துள்ளனர்.

இதைப்பற்றி நாராயணா குழும மருத்துவமனையின் மருத்துவர் தேவி ஷெட்டி தெரிவித்துள்ளதாவது: பணம் செலுத்தப்படாததால் நோயாளிகளின் உடல்களை பணயக் கைதிகளாக வைப்பது என்பது சட்டவிரோதமானது, சட்டவிரோதமானது என்று தெரிவிப்பதை விட அவ்வாறு செய்வது மருத்துவ முறைப்படி சரியல்ல, எங்களுடைய மருத்துவமனை குழுவில் எவ்வளவு பணம் செலுத்தப்படாவிட்டாலும், ஒரு உடலையும் நோயாளியையும் பணய கைதியாக வைத்து இருக்க முடியாது என்ற விதி முறையை தெள்ளத் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

யார் என்ன சொன்னாலும் பல தனியார் மருத்துவமனைகள் நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மதிக்காமல் இவ்வாறான செயல்களை தொடர்ந்து செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.