சென்னை,

திரைப்பட தயாரிப்பு நிர்வாகியான அசோக்குமார் கந்துவட்டி கொடுமை காரணமாக தற்கொலை செய்துகொண்டது  திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், நடிகர் கமலஹாசன், கந்துவட்டி கொடுமையை உடனே தடுத்தாக வேண்டும் என்று டுவிட் செய்துள்ளார்.

நடிகர் சசிகுமாரின் உறவினரும் அவரது பட நிறுவன தயாரிப்பு நிர்வாகியுமான அசோக்குமார் நேற்று முன்தினம் தற்கொலை செய்துகொண்டார். “வாங்கிய கடனுக்கு வட்டி கேட்டுஅன்புச் செழியன் மிரட்டியதால் தற்கொலை செய்துகொண்டேன்” என்று அவர் எழுதி வைத்திருந்ததாக ஒரு கடிதம் கைப்பற்றப்பட்டிருக்கிறது. அவரது உடல் மாலை அவரது சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.

அவரது தற்கொலைக்கு காரணமான  அன்புச் செழியன் என்ற பைனான்சியர்  தலைமறைவாகி விட்டார். அவரைக் காவல்துறை தேடி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அன்புச்செழியனால் பாதிக்கப்பட்ட திரைத்துறையினர் சிலர் இன்று கூடி ஆலோசித்து, அடுத்தகட்ட  நடவடிக்கை எடுக்க திட்டமிட்டதாகவும் ஒரு தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில், நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது,

“கந்துவட்டிக் கொடுமை எழை விவசாயி முதல் பணக்காரர்கள் என நம்பப்படும் சினிமாக்காரர் வரை ஆட்டிப்படைப்பதை சட்டமும் சினிமாத்துறையும் தடுத்தாக வேண்டும். திரு. அசோக்குமாரின் அகாலமரணம் போல் இனி நிகழவிடக்கூடாது. குடும்பத்தார்க்கும் நட்புக்கும் கலைத்துறையின் அனுதாபங்கள்.”

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.