கவுகாத்தி:

சில நபர்கள் மற்றும் அமைப்புகள் மூர்க்கத்தனமாக நடந்து கொள்கின்றனர். அவர்கள் நீதிதுறை யால் முறியடிக்கப்படுவார்கள் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் எச்சரித்துள்ளார்.

அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தி உயர் நீதிமன்ற வளாக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், அங்கு கட்டப்பட்டுள்ள கலை அரங்கம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டி பேசினார்.

அப்போது, சில தனி நபர்கள், சில அமைப்புகள் மூர்க்கத்தனமாக நடந்து கொள்கின்றனர். இதெல்லாம் விதிவிலக்குகள். இவை நமது நீதித்துறையின் வலுவான அடித்தளம் மூலமாக முறியடிக்கப்பட்டு, மீண்டும் இயல்பு நிலை திரும்பும் என  நம்புகிறேன்.

அரசு அலுவலகங்கள் மாதிரி அல்லாமல், நீதிமன்றங்கள் தனிச் சிறப்புடன் செயல்படுபவை. தனி அதிகார அமைப்புகளின் உத்தரவுகளுக்கு கட்டுப்படாமல், நீதியின் சக்கரத்தை ஒவ்வொரு நாளும் முன்னோக்கி நகர்த்தக் கூடியவை. மக்களின் நம்பிக்கையில்தான், நமது நீதித்துறை அமைப்பு இருக்கிறது என்பதையும், நாம் பிறப்பிக்கும் தீர்ப்புகள் மற்றும் உத்தரவுகளின் அடிப்படையில்தான் நீதித்துறை உருவாக்கப்படுகிறது  என்பதை நீதிபதிகள் நினைவில் கொள்ள வேண்டும்.

நீதிபதியாக பணியாற்ற தேர்வு செய்யப்படுவது, புனிதான நீதித்துறையில் சேவை செய்யும் வாய்ப்பு. இதன் மதிப்பு எப்போதும் அளவிட முடியாதது.

இவ்வாறு அவர் பேசினார்.