சென்னை: தமிழ்நாட்டில் ‘ஹுக்கா பார்’ நடத்த தடை விதிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. தடையை  மீறினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் புகைக்குழல் கூடங்கள் (ஹுக்கா பார்) அதிக அளவில் திடீரென பெருகி உடல் நலனுக்கு கொடிய சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. பல உணவகங்களும், புகைப்பிடிக்கும் பகுதிகளில் இந்த சேவையை வழங்கி, புகைப்பிடிப்பதை அனுமதித்து வருகின்றன. தற்போது தமிழகத்தில் புகைக்குழல் கூடத்தை ஒழுங்குபடுத்தும் சட்டம் எதுவும் இல்லை.

இந்த நிலையில்,  தமிழக சட்டப்பேரவையில் இனறு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்ட திருத்த மசோதா ஒன்றை தாக்கல் செய்தார். அதில், சிகரெட்டுகள் மற்றும் பிற புகையிலைத் தயாரிப்புகள் (விளம்பரம் செய்தலை தடை செய்தல் மற்றும் வணிகம், வாணிபம், உற்பத்தி, வழங்குதல் மற்றும் விநியோகம் செய்தலை முறைப்படுத்துதல்) சட்டம்-2003-ஐ, தமிழகத்திற்கு ஏற்ற வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த திருத்த மசோதாப்படி,  சிகரெட்டுகள் மற்றும் பிற புகையிலைத் தயாரிப்புகள் (விளம்பரம் செய்தலை தடை செய்தல் மற்றும் வணிகம், வாணிபம், உற்பத்தி, வழங்குதல் மற்றும் விநியோகம் செய்தலை முறைப்படுத்துதல்) சட்டம்-2003-ஐ திருத்தி, புகைக்குழல் கூடத்தை தடை செய்யவும், அதை மீறுபவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதித்து தண்டனை அளிக்க முடிவு செய்துள்ளது

இந்த சட்ட மசோதா இன்று சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் குரல் வாக்கெடுப்பிற்குப் பின்பு நிறைவேறியது.