திருவண்ணாமலை:  ஆகஸ்ட் 15ஆம் தேதி அனைவரும் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி வைத்து சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் ரவி கேட்டுக்கொண்டுள்ளார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள திருவண்ணாமலை மாவட்டம் சென்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, அங்கு கோவிலை சுற்றி கிரிவலம் சென்று, சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் குனிகாந்தூரில் செயல்பட்டு வரும்  ஜவ்வாது மலைவாழ் மக்கள் மேல்நிலைப்பள்ளி  விழாவில்  கலந்துகொண்டு, மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்என்.ரவி, “இந்த நாட்டில் இன்னமும் காந்தியின் கொள்கையை நேசிக்கிறார்கள் காந்தியை பற்றி நினைக்கிறார்கள் அதனால்தான் இந்த நாடு இன்று வரை பாதுகாப்பாக உள்ளது. மாணவர்களின் கனவுகள் மிகப் பெரியதாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நீங்களும் பெரிதாக வாழ முடியும். ஆகவே உங்களுடைய கனவுகள் பெரியதாகவே எண்ணி பெரியதாகவே வாழ வழிவகை செய்து கொள்ளுங்கள்.

நான் படித்ததும் ஒரு அரசு பள்ளியில் தான். என் தந்தையும் ஒரு விவசாயி தான். இருந்தாலும் என்னுடைய கற்பனைகள் கனவுகள் எல்லாம் உயர்வாக இருந்தன, ஆகவே நான் இந்த நிலைக்கு உயர்ந்திருக்கின்றேன். நீங்களும் அந்த நிலைக்கு உயர வேண்டும் என்று உங்களுடைய எண்ணமும் செயலும் முயற்சியும் உயர்ந்தவையாக இருக்க வேண்டும் . நீங்கள் தற்போது ஒரு ஆலமரத்தின் விதைகள் போல் இருக்கிறீர்கள். ஆலமரம் எப்படி பறந்து விரிந்து பல மக்களுக்கு நிழல் தந்து பலன் தருகிறதோ அதுபோல் நீங்களும் வளர்ந்து இந்த நாட்டிற்கும் மக்களுக்கும் பயனுள்ளவர்களாக இருக்க வேண்டும். நீங்கள் மூன்று கொள்கைகளை கடைபிடிக்க வேண்டும்.

சிங்கம் புலி போன்ற விலங்குகள் கடுமையாக உழைத்தால் தான் உணவு கிடைக்கும். அதுபோல் நீங்களும் கடுமையாக உழைக்க வேண்டும். உழைப்பின் வழியாக உங்கள் வாழ்க்கையை பெரிதாக்கிக் கொள்ள வேண்டும். இன்று உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவை உற்று நோக்கி கொண்டிருக்கிறது.இன்று இந்தியா வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆகவே நாட்டிற்கு நன்மை செய்துவளர்ச்சிக்கு பாடுபட வேண்டும்.

இந்த நாடு வளர வேண்டுமென்றால் நீங்கள் வளர வேண்டும் உங்கள் குடும்பம் வளர வேண்டும். உங்கள் கிராம வளர வேண்டும், மாநிலம் வளர வேண்டும், நாடு வளர்கிறது ஒட்டுமொத்த இந்தியாவே வளர்ச்சி அடைந்த நாடாக வளர்கிறது. மாணவச் செல்வங்களே இந்த நாட்டினுடைய எதிர்காலமே நீங்கள் தான். உங்களை நம்பி தான் இந்த மாபெரும் நாடு உள்ளது. ஆகவே இந்த நாட்டிற்காக உங்களுடைய வாழ்வை அர்ப்பணிக்க வேண்டும்.

இந்தப் பள்ளியை முடித்து நீங்கள் உயர்ந்த நிலையை அடையும் போது உங்கள் உயர்வுக்கு காரணமாக இருந்த இந்த பள்ளியை என்றும் நீங்கள் திரும்பிப் பார்க்க‘ வேண்டும். இந்தப் பள்ளியில் படித்து பல்வேறு நிலையில் உயரும் நீங்கள்பழைய மாணவர்கள் சங்கத்தை நீங்கள் ஆரம்பிக்க வேண்டும். அதன் வாயிலாக நீங்கள் படித்த பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு வளர்ந்த நீங்கள் ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்.

நீங்கள் எதை செய்ய நினைத்தாலும் என்னிடம் தொலைபேசியிலோ அல்லது இமெயில் மூலமாகவோ எந்நேரமும் தொடர்பு கொள்ளலாம். ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்திய சுதந்திர தினத்தை நாம் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும். ஒவ்வொருவருடைய வீடுகளிலும் இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும். அந்த நாள் நாம் அனைவருக்கும் மகிழ்ச்சியான நாளாக இருக்க வேண்டும்.

இவ்வாறு கூறினார்.