டெல்லி: ராகுல் காந்தியின் 2ஆண்டு தண்டனையை உறுதி செய்த குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி பாட்னாவுக்கு மாற்றம் சென்றும், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 3 நீதிபதிகள் நியமனம் செய்தும் உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.

2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலி பிரசாரத்தின்போது,  மோடி சமூகம்  குறித்து அவதூறாக பேசியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டி யிட்டு நாடாளுமன்ற உறுப்பினரான ராகுல் காந்திக்கு, 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை தொடர்ந்து வயநாடு தொகுதி எம்.பி. பதவியில் இருந்து அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். அவரது மேல்முறையீடும் குஜராத் உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றம் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இதனால் ராகுல் மீண்டும் எம்.பி. பதவியை பெற்றுள்ளார். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்,  ராகுல் காந்தியின் தண்டனையை நிறுத்த மறுத்த குஜராத் மாநில உயர்நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் பிரசாக்கை  பாட்னாவுக்கு மாற்றம் செய்து உச்ச நீதிமன்ற கொலிஜியம் உத்தரவிட்டு உள்ளது. மேலும், சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 3 நீதிபதிகளை மாற்றம் செய்தும் பரிந்துரை செய்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை 75. ஆனால், தற்போது 63 நீதிபதிகள் மட்டுமே பணியில் உள்ளனர்.  காலியாக உள்ள இடங்களை நிரப்ப வழக்கறிஞர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி வினீத் குமார் சிங், தெலங்கானா உயர் நீதிமன்ற நீதிபதி சுதிர் குமார், குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி கீதா கோபி ஆகியோரை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

கொலிஜியம் பரிந்துரையை மத்திய சட்ட ஆணையம் ஏற்றால்,  சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 66 ஆக உயரவுள்ளது.

ஏற்கனவே, உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்த 4 பேரின் பெயர்கள் இன்னும் மத்திய அரசால் ஒப்புதல் அளிக்கப்படாத நிலையில், வேறு நீதிமன்ற நீதிபதிகள் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும்,  குஜராத் உயர் நீதிமன்றத்திலிருந்து வேறு நீதிமன்றங்களுக்கு 4 நீதிபதிகள் மாற்றம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டிருப்பது வழக்கறிஞர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.