திருப்பதி லட்டு உருவான வரலாறு:
சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிரியமான ஒரு கடவுள் பிரசாதம் என்றால், அது திருப்பதி லட்டு தான். திருப்பதி போய்விட்டு வருபவர்கள் லட்டு இல்லாமல் வீட்டுக்குத் திரும்ப மாட்டார்கள்.   லட்டு என்பது சமஸ்கிருத வார்த்தையான ‘லட்டுகா’ என்பதன் சுருக்கம் ஆகும். அதற்கு ‘சின்ன பந்து’ என்று பொருள். திருப்பதி லட்டும் பந்து வடிவில் இருப்பதால், அதற்கு அந்தப் பெயரே நிலைத்துவிட்டது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று எல்லா மொழிகளிலும் அது ‘லட்டு’ என்றே சொல்லப்படுகிறது.
திருமலை திருப்பதியில் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கில் தயாரிக்கப் படும், லட்டு பிரசாதம் வெறும் உணவு பண்டம் மட்டுமல்ல. அதையும் தாண்டி வேங்கடவனின் பரிபூரண பிரசாதமாகப் பலராலும் விரும்பப்படுகிறது. அதில், சர்க்கரை, முந்திரி, திராட்சை ஆகியவற்றுடன் பெருமாளின் அருளும் கலந்திருப்பதாகக் காஞ்சி பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சாமிகள் பலமுறை குறிப்பிட்டுள்ளார்.
திருப்பதி லட்டு பிரசாதம் என்பது ஆரம்பத்திலிருந்தே தரப்படுவதாகப் பலரும் நினைத்துக்  கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மையில் லட்டு என்கிற இனிப்பு பிரசாதம் அறிமுகமாகிக் கிட்டத்தட்ட 300 வருடங்கள்தான் ஆகிறது. அதாவது, லட்டு எப்போது முதல் வழங்கப் பட்டு வருகிறது என்பதற்கான ஆதாரமாகத் தகவல்கள் அல்லது கல்வெட்டுகள் ஆகியவை இல்லை. கி.பி 17-ம் நூற்றாண்டில் இருந்து லட்டு பிரசாதம் நடைமுறையில் இருந்து வருவதாகத் தகவல்கள் உள்ளன.
திருமலை வேங்கடவனின் சுப்ரபாத சேவை, தோமாலை சேவை, ஆர்ஜித பிரம்மோத்சவம், டோலோத்சவம், வசந்தோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை, ஏகாந்த சேவை போன்ற பல்வேறு சேவைகளில், கட்டணம் செலுத்திக் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு இரண்டு சிறு லட்டுகள் பிரசாதமாகத் தேவஸ்தானத்தால் வழங்கப்படுகின்றன. பெருமாள் சேவைக்குக் கட்டணம் செலுத்துபவர்களுக்கும், பக்தர்களுக்கு இலவசமாக அளிப்பதற்கும், ஒருவருக்கு இவ்வளவு லட்டு
என்று விலைக்குத் தருவதற்கும் திருமலையில் தினமும் லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன.
தினந்தோறும் மாபெரும் விசேஷமாகவும், உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலும் விமரிசையாக நடக்கும் திருக்கல்யாண உற்சவம், கி.பி. 1546-ம் ஆண்டில்தான் முதன்முதலாகத் தொடங்கப்பட்டதாகக் கல்வெட்டுத் தகவல் உண்டு. அது விஜயநகர மன்னர்களின் ஆட்சிக் காலம். பங்குனி மாதத்தில் ஐந்து நாட்கள் இந்தத் திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடக்கும். அப்போது திருக்கல்யாணத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு வடை, மனோகரம், அவல், பொரி போன்றவை பிரசாதமாக வழங்கப் பட்டதாக கல்வெட்டுத் தகவல் சொல்கிறது. அதற்குப் பின்னரே லட்டு பிரசாதம் வழக்கத்திற்கு வந்துள்ளது.
திருப்பதியில் 17-ம் நூற்றாண்டில் லட்டு அறிமுகமாகிவிட்டாலும், 20-ம் நூற்றாண்டில்தான் பூரண பிரசாதமாக மாறியது என்பதைப் பலரும் குறிப்பிட்டுள்ளனர்.