இரவில் திறந்திருக்கும் கோயில்:

கோயிலின் பெயர்: ஸ்ரீ கால தேவி நேர கோயில்

தெய்வம் : காலதேவி

அமைந்துள்ள இடம்: எம்.சுப்புலாபுரம் அருகில் உள்ள சிலார்பட்டி கிராமம், மதுரை மாவட்டம்.

மற்ற கோயில்களைப் போல் பகல் பொழுதில் திறந்து, இரவில் மூடப்படும் கோயிலாக இல்லாமல், சூரிய அஸ்தமனத்தின் போது திறக்கப்பட்டு, சூரிய உதயம் ஆவதற்கு முன்னர் நடை சாத்தப்படுகின்ற வித்தியாசமான கோயிலாக இது உள்ளது.

பக்தர்களின் தரிசனத்திற்காக இரவு முழுவதும் திறந்திருக்கும் அதிசய கோயிலாக உள்ளது. இரவு முழுவதும் திறந்திருக்கும் உலகில் உள்ள ஒரே கோயில் என்றால் இதுவாக தான் இருக்கும்.

விசேஷ தினங்கள்:

இந்த ஆலயத்தில் காலதேவிக்கு உகந்த பௌர்ணமி, அமாவாசை தினங்களில் பக்தர்களின் கூட்டம் மிக அதிகளவில் வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

கெட்ட நேரம் விலக என்ன செய்வது?

இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் கோயிலை வலதிலிருந்து இடது புறமாக 11 முறை சுற்றி பின்னர், 11 முறை இடதிலிருந்து வலப்புறமாக சுற்றி வந்து, ஸ்ரீகாலதேவிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட 11 நெய் விளக்கேற்றியபின் கோயிலுக்குள்ளே சென்று கருவறைக்கு முன் உள்ள காலசக்கரத்தின் மீது அமர்ந்து 11 விநாடிகள் நின்று காலதேவிக்கு நேருக்கு நேராக நின்று தரிசனம் செய்தால் போதும். உங்களின் அனைத்து கெட்ட நேரமும் நீங்கி, நல்ல நேரம் பிறக்கும் என்பது தான் இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

 இங்கு வரும் பக்தர்கள், தனக்கு இதைக் கொடு, அதை கொடு என வேண்டுவதற்குப் பதிலாக, காலதேவியிடம் ‘எனக்கு எது நல்லதோ அதைக் கொடு, நல்ல நேரத்தைக் கொடு’ என வேண்டினாலே போதும்.

அதே போல் கோரிக்கை நிறைவேற 3 பௌர்ணமி, 3 அமாவாசை கோயிலுக்குச் சென்று காலதேவியை வணங்கினால் பில்லி, சூனியம், ஏவல், தீராத வியாதிகள் என அனைத்து பிரச்சினைகளும் தீரும்.

எப்படிச் செல்லலாம்:

மதுரையிலிருந்து ராஜபாளையம் செல்லும் பேருந்தில் சென்றால் சுப்பலாபுரம் மெயின் ரோட்டில் இறங்கி, இந்த கோயிலுக்கு ஆட்டோ அல்லது நடந்தே கூட கோயிலை அடைய முடியும்.

போக்குவரத்து வசதிகள் சாதாரண நாட்களில் அதிகம் இல்லாததால், முதலில் செல்பவர்கள் பௌர்ணமி அல்லது அமாவாசை தினங்களில் சென்றால் போக்குவரத்து எளிதாக இருக்கும்.