டெல்லி: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தொடங்கியுள்ள நிலையில், இங்கு முதல்நாளில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட முதல் மசோதாவான,  மகளிர் இடஒதுக்கீடு மசோதா லோக்சபாவில் ஒருமனதாக நிறை வேற்றப்பட்டு உள்ளது.

லோக்சபா மற்றும் மாநில சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் வகையில், லோக்சபா, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியது, வரலாற்று சாதனை என்று கூறலாம். மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் 454 எம்.பி.க்கள் மசோதாவுக்கு ஆதரவாகவும், 2 எம்.பி.க்கள் எதிராகவும் வாக்களித்தனர்.

நவ இந்தியாவின் புதிய நாடளுமன்றக் கட்டிடம் திறக்கப்பட்டு அதில் முதல் மசோதாவாக (128ம் திருத்தம்) மகளிருக்கான இட ஒதுக்கீடு 33% பரிந்துரைக்கப்பட்டு அது மக்களவையில் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

இந்தியா சுதந்திரம் பெற்ற 1947ற்குப் பிறகு பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் 4000 ற்கும் மேலான மசோதாக்கள் இதுவரை தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.  அவை சட்டங்கள் என நடை முறைக்கு வந்தன. அதில் சட்ட சாசன (Constitution amendment bills) வரைவுக்கு உட்பட்டு 128 மசோதாக்கள் இறுதியை எட்டிய போதும் 105 மசோதாக்கள் சட்ட வடிவம் ஆக்கப்பட்டு  பழைய பாராளுமன்றத்தின்  கட்டிடத்தில் மூலமே நடைமுறைக்கு வந்துள்ளன.

இந்த நிலையில், தற்போது நடைபெற்று பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில்  முதல்நாளன்று முதல் மசோதாவாக மத்திய பாஜ அரசால் தாக்கல் செய்யப்பட்ட  மகளிருக்கு33% இடஒதுக்கீடு மசோதா காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, புதிய நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் (19ந்தேதி) முதல் அலுவலாக தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்ற மக்களவையில் சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மெஹ்வால் செப்டம்பர் 19ந்தேதி அன்று இந்த மசோதாவை  தாக்கல் செய்தார்.

இந்த மசோதாமீது செப்டம்பர் 20ந்தேதி  விவாதம் நடைபெற்றது. இந்த மசோதா மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் கனவு என்றும், இது காங்கிரசுக்கானது என சோனியா காந்தி கூறியிருந்தார்.  அதுபோல, பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை வரவேற்பதாக ராகுல் காந்தி தெரிவித்ததுடன், இது நம் நாட்டின் பெண்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மசோதா ஆகும். அவர்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள், பல்வேறு வழிகளில் அவர்கள் திறமை மிக்கவர்கள்.” “ஆனால், என் பார்வையில் இந்த மசோதா ஒருவிதத்தில் முழுமை பெறாமல் உள்ளது. எனக்கு ஓ.பி.சி. பிரிவை சார்ந்த பெண்களுக்கு இடஒதுக்கீடு இல்லாதது முழுமை பெறாத ஒன்றாகவே இருக்கிறது. மத்திய அரசு நிர்வாகத்தில் உள்ள 90 செயலாளர்களில் 3 பேர் மட்டுமே ஓ.பி.சி. பிரிவை சேர்ந்த வர்கள். இந்த சமூக பெண்களுக்கு இடஒதுக்கீடு இல்லாததால், இந்த மசோதா முழுமையற்றதாக இருக்கிறது,” என்று தெரிவித்து உள்ளார்.

இந்த மசோதா மீதான  விவாதத்தில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.   இதையடுத்து,  ஓட்டெடுப்பு நடைபெற்ற நிலையில், இந்த மசோதாவுக்கு ஆதரவாக 454 பேரும், எதிராக 2 பேரும் வாக்களித்தனர். அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் மக்களவையில்  மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது.

அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்வதால், மசோதா நிறைவேற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை எனும் நிலையில், வாக்கெடுப்பில் இந்த மசோதா பெரும்பான்மை பெற்றது. இந்நிலையில், மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேறியது.

இதையடுத்து இந்த மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.