கொல்கத்தா: என்ஆர்சி குறித்து மக்கள் மத்தியில் மம்தா பானர்ஜி பீதியைக் கிளப்பி வருவதாகவும், இந்து, சீக்கிய மற்றும் ஜைன அகதிகள் என்ஆர்சி அடிப்படையில் வெளியேற்றப்படமாட்டார்கள் என்றும் பேசினார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.

மக்களவைத் தேர்தல் முடிவடைந்த பின்னர் முதன்முறையாக உள்துறை அமைச்சராக மேற்குவங்க மாநிலம் சென்ற அமித்ஷா பேசியபோது இவ்வாறு தெரிவித்தார்.

(முஸ்லீமல்லாத) எந்தவொரு அகதியையும் பாரதீய ஜனதா அரசாங்கம் நாட்டைவிட்டு வெளியேற்றாது என்றார் அவர். கொல்கத்தாவில் நடைபெற்ற என்ஆர்சி – ஜார்கன் அபியான் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார் அமித்ஷா.

“வங்கதேசத்திலிருந்து குடியேறிய லட்சக்கணக்கான மக்கள் என்ஆர்சி மூலம் வெளியேற்றப்படுவார்கள் என்று மம்தா பானர்ஜி கூறிவருகிறார். ஆனால், அப்படி ஒருபோதும் நடக்காது என்று தெளிவுபடுத்தவே நான் இப்போது இங்கு வந்துள்ளேன்.

எந்தவொரு அகதியும் இங்கிருந்து வெளியேற்றப்பட மாட்டார். அதேசமயம், எந்தவொரு ஊடுருவல்காரரையும் இங்கு வாழ அனுமதிக்கமாட்டோம்” என்றார் அவர்.