சிம்லா

மாசலப் பிரதேசத்தில் உறைபனி மற்றும் பனிப்பொழிவால் குளிர் மிகவும் அதிகரித்துள்ளது.

நாடெங்கும் தற்போது குளிர் அதிகரித்துள்ளது. குறிப்பாக வட இந்தியாவில் குளிர் மிகவும் அதிகமாக காணப்படுகிறது. பஞ்சாப் மற்றும் அரியானாவில் உஷ்ணம் 5.3 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. இது வழக்கத்தை விட மிகவும் குறைவாகும். குறிப்பாக பதான்கோட், பதிண்டா மற்றும் சண்டிகர் ஆகிய நகரங்களில் உஷ்ணம் தற்போது 5.3 முதல் 6.6 டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது.

இந்த பகுதிகளிலேயே இவ்வளவு குளிர் இருக்கும் போது இமயமலையில் அமைந்துள்ள இமாசலப் பிரதேசம் இன்னும் குளிராக உள்ளது. உஷ்ணக் குறைவால் உறைபனி உண்டாகி சாலைகளை மூடி உள்ளது. அத்துடன் பனிப்பொழிவும் அதிகமாக உள்ளது. மாநிலத்தின் பல இடங்களில் பனிப்பொழிவு காரணமாக மக்கள் வெளியே வருவதை நிறுத்தி உள்ளனர்.

நேற்று சிம்லாவில் 44.5 செமீ, மனாலியில் 30 செமீ, கல்பாவில் 39.6 செமீ அளவுக்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதே நிலை இன்றும் தொடர்கிறது. ஒரு சில இடங்களில் மழையும் பெய்துள்ளது. இந்த கால கட்டத்தில் இந்த பகுதிகளில் மழை பெய்வது கிடையாது. அதிசயமாக நேற்று மழை பெய்துள்ளது.

உஷ்ண நிலை தற்போது உறை நிலைக்கும் கீழே மைனஸாக உள்ளது. டல்ஹவுசி, குஃப்ரி, மனாலி மற்றும் சாலி ஆகிய இடங்களில் மைனஸ் 0.7 டிகிரி செல்சியசில் இருந்து மைனஸ் 2.9 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகி உள்ளது, மிகவும் குறைந்த பட்சமாக லாகவுல் பகுதியில் மைனஸ் 11 டிகிரி வெப்பம் இருந்துள்ளது.

சிம்லா நகரில் வெப்பம் இதுவரை 0 டிகிரி செல்சியஸுக்கு கீழே செல்லவில்லை.