பெங்களூரு

சித்தலிங்கா மடாதிபதி சிவகுமார சாமி இறுதிச் சடங்குக்கு வராத மோடியை காங்கிரஸ் தலைவர்கள் கடுமையாக தாக்கி உள்ளனர்.

துமக்கூருவில் அமைந்துள்ள லிங்காயத்துக்களின் மடமான சித்தகங்கா மடத்தின் மடாதிபதி சிவகுமார சாமி தனது 111 ஆம் வயதில் நேற்று முன் தினம் மரணம் அடைந்தார். அவருடைய மறைவு நாடெங்கும் உள்ள அவருடைய பக்தர்களை துயரத்தில் ஆழ்த்தியது. அவருடைய மறைவுக்காக கர்நாடக அரசு மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப் போவதாக அறிவித்தது. நேற்று பொது விடுமுறை அளிக்கப்பட்டது.

துமக்கூருவில் உள்ள மடத்தின் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த அவர் உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். நேற்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் துமக்கூரு வந்து பிரதமர் மோடியின் சார்பாக இறுதி மரியாதை செலுத்தினார். பிரதமர் வருவார் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் பிரதமர் மோடி வராமல் இருந்தது பலருக்கும் அதிருப்தியை உண்டாக்கி இருக்கிறது.

கர்நாடக துணை முதல்வர் பரமேஸ்வரா தனது டிவிட்டரில், “பிரதமர் மோடி பிரபலங்களின் திருமணத்துக்கு செல்கிறார். திரைப்பட நட்சத்திரங்களை சந்திக்கிறார். ஆனால் ஏழைகளுக்கு உதவிய எங்கள் கடவுளின் இறுதிச் சடங்குக்கு வராமல் இருக்கிறார். சாமிஜிக்கு பாரத ரத்னா விருது வழங்க விடுத்த கோரிக்கைகளையும் கண்டுக் கொள்ளவில்லை. இந்த விருதுக்கு முழுமையான தகுதி உடையவர் அவர்” என பதிந்துள்ளார்.

இது போல காங்கிரஸ் தலைவர்கள் பலர் மோடிக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். அத்துடன் சிவகுமாரசாமிக்கு பாரத ரத்னா விருது வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகுமார சாமி கடந்த 1965 ஆம் வருடம் கர்நாடக பல்கலைக்கழகத்தில் இலக்கியத்தில் டாக்டரேட் பட்டம் பெற்றுள்ளார். அத்துடன் கர்நாடக அரசின் மிகப் பெரிய விருதான கர்நாடகா ரத்னா கட்ந்த 2007 ஆம் வருடம் வழங்கப்பட்டுள்ளது.