உடுப்பி:
நாளை முதல் உடுப்பியில் 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலத்தின் உடுப்பி பகுதியில் அமைந்துள்ள ஓரி கல்வி நிறுவனத்தில், இஸ்லாமியப் பெண்கள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருவதைக் கண்டித்து, ஒரு தரப்பு மாணவர்கள் காவி துண்டுகளை அணிந்து கல்லூரிக்கு வரத்தொடங்கினர். இதன் காரணமாக மாணவிகளுக்கு ஹிஜாப் அணிந்து வர சில கல்லூரிகள் தடை விதித்தன. இதனைத் தொடர்ந்து ஹிஜாப் அணிவதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் போராட்டம் வெடித்தது.

இதனால் மாநிலம் முழுவதும் பதற்றம் ஏற்பட்ட நிலையில், ஹிஜாப் விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், மாணவர்கள் மத அடையாளத்தை வெளிப்படுத்தும் உடைகளை பள்ளி, கல்லூரிகளில் பயன்படுத்தத் தடை விதித்தது. மேலும் விசாரணை முடியும் வரை இந்த தடை அமலில் இருக்கும் என்றும் கர்நாடக உயர்நீதிமன்றம் அறிவித்தது. கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கர்நாடகா முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், போராட்டங்கள் துவங்கிய உடுப்பி பகுதியில் நாளை முதல் 144 தடை உத்தரவைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 14 காலை 6 மணி முதல் பிப்ரவரி 19 மாலை 6 மணி வரை உடுப்பி முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.