பெங்களூரு: கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில்,  கர்நாடக அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. வழக்கை செப்டம்பர் 5ந்தேதிக்கு ஒத்தி வைத்தது.

கல்வி நிலையங்களில் மத அடையாளங்கள் கூடாது என கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில்,  கா்நாடக மாநிலம், உடுப்பியில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு வருவதற்கு எதிா்ப்பு எழுந்தது. இதற்கு எதிராக இந்து மாணவா் அமைப்பினா் போராட்டம் நடத்தினா். இதனால் அங்கு மோதல் ஏற்பட்டது.

இதுதொடா்பான வழக்கை விசாரித்த கா்நாடக உயா்நீதிமன்றம், ‘ஹிஜாப் அணிவது இஸ்லாத்தில் அத்தியாவசிய தேவையானதல்ல’ என்று கூறியதுடன் ஹிஜாப் அணியத் தடை விதித்த கர்நாடக அரசின் உத்தரவு செல்லும் என்று கூறியது.

இந்த உத்தரவுக்கு எதிா்ப்பு தெரிவித்து மாணவிகள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மனுவில், ‘மதச் சுதந்திரத்தில் நீதிமன்றம் தலையிடுகிறது. ஹிஜாப் அணிவது என்பது, இந்திய அரசியலமைப்புச் சட்டம் அளித்துள்ள தனி உரிமையாகும். இதை கா்நாடக உயா்நீதி மன்றம் கருத்தில் கொள்ளவில்லை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், முன்கூட்டியே விசாரணை கோரப்பட்டதால், ஒத்திவைப்பு கோரும் மனுவை ஏற்க மாட்டோம் என்று கூறிய உச்சநீதிமன்றம், இதுதொடர்பாக விளக்கம் கேட்டு கர்நாடக அரசுக்கு,நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் வழக்கின் விசாரணையை செப். 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.