கனடாவில் உள்ள ஒரு தெருவுக்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் பெயரை வைத்து கௌரவப்படுத்தியுள்ளது மார்க்கம் நகர நிர்வாகம்.

மார்க்கம் நகர மேயர் பிராங்க் ஸ்கார்பிடி தலைமையில் நடைபெற்ற விழாவில் இந்த சாலையின் பெயர் பலகை திறந்து வைக்கப்பட்டது.

 

இதுகுறித்து கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மான் “இதை நான் என் வாழ்நாளில் நினைத்துப் பார்த்ததில்லை. கனடா மக்கள் அனைவருக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஏ.ஆர். ரஹ்மான் என்பது பெயரல்ல. அந்த சொல்லுக்கு இரக்கமுள்ளவர் என்று பொருள். இரக்கம் என்பது நம் அனைவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான கடவுளின் குணம். எனவே அந்த பெயர் கனடாவில் வாழும் அனைத்து மக்களுக்கும் அமைதி, செழிப்பு, மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை கொண்டு வரட்டும். கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா மட்டுமன்றி பல்வேறு மொழி படங்களுக்கு இசையமைத்துள்ள ஏ.ஆர். ரஹ்மானை கௌரவிக்கும் விதமாக நடைபெற்றுள்ள இந்த நிகழ்வு குறித்து அவரது ரசிகர்கள் மட்டுமன்றி திரையுலகைச் சேர்ந்த பலரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.