வால்பாறை பகுதியில் குறுகிய பாலங்கள் அமைக்கும் பணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

வால்பாறை பகுதியில் கடந்த ஆண்டு பெய்த கனமழை காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டது. பொள்ளாச்சி சாலையில் ஏற்பட்ட மண் சரிவுகளை கடந்த ஓராண்டாக சரிசெய்து வந்த நெடுஞ்சாலைத்துறையினர், தற்போது ரொட்டிக்கடை பழைய வால்பாறை பகுதியில் உள்ள சேதமடைந்த பத்திற்கும் மேற்பட்ட சிறு பாலங்களை கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

எதிர்வரும் தென்மேற்கு பருவமழையை எதிகொள்ள இப்பணிகளை தீவிரப்படுத்தி வரும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், வரும் 28ம் தேதிக்குள் இப்பணிகள் முடிவுக்கு வரும் என்று உத்திரவாதம் அளித்துள்ளனர்.

இத்தகைய சூழலில், கடந்த ஆண்டு பருவமழையின் போது தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட பூமி பிளவு குறித்து இதுவரை எவ்வித ஆய்வும் மேற்கொள்ளப்படாமல், பணிகள் கிடப்பிலேயே வைக்கப்பட்டுள்ளதால் இம்முறையும் அத்தகைய பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக அப்பகுதியில் வசிப்போர் பீதி அடைந்துள்ளனர். 30ம் தேதி பருவமழை துவங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆய்வுகள் ஓரிரு நாட்களில் தொடங்கும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.