சென்னை: கவர்னர் தலைமையில் நடைபெறும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. பட்டமளிப்பு விழாவை தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புறக்கணித்துள்ளார். ஏற்கனவே மதுரை காமராஜர், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த நிலையில், தற்போது  திறந்த நிலை பல்கலைக்கழக  பட்டமளிப்பு விழாவை புறக்கணித்து உள்ளார்.

தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் கவர்னர் ரவிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. தற்போதைய நிலையில், நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தராக, அரசியல் சாசனப்படி மாநில ஆளுநரே இருந்து வருகிறார். ஆனால், தமிழ்நாடு உள்பட பல மாநில அரசுகள், ஆளுநரை துணைவேந்தர் பதவியில் இருந்து அகற்றிவிட்டு மாநில முதல்வரே துணைவேந்தராக இருக்கும் வகையில் சட்ட திருத்தங்களை கொண்டு வருகிறது.

ஏற்கனவே இதுபோல, மேற்குவங்க முதல்வர் மம்தா கொண்டு வந்த சட்டத்தை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. இருந்தாலும் தமிழ்நாடு அரசு,  பல்கலைக்கழக துணைவேந்தராக மாநில முதல்வரே இருக்கும் வகையில், சட்டப்பேரவையில் சட்ட திருத்தம் செய்து நிறைவேற்றி, அதை கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளது. இதற்கு கவர்னர் அனுமதி மறுத்து வருகிறார்.

அதேபோல டிஎன்பிஎஸ்சி எனப்படும் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக முன்னாள் டிஜிபியும் ஐபிஎஸ்ஸுமான சைலேந்திர பாபுவை நியமித்து, ஒப்புதலுக்கான கோப்பை தமிழக அரசு ஆளுநருக்கு அனுப்பியது. எனினும் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை

மேலும், இதற்கிடையே தியாகியும் கம்யூனிஸ் மூத்த தலைவருமான சங்கரய்யாவுக்கு கவுரவ முனைவர் பட்டம் வழங்க, 18.08.2023 அன்று நடைபெற்ற மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆட்சிக் குழு (Syndicate) கூட்டத்தில் அவருக்கு கெளரவ முனைவர் பட்டம் (D.Litt) வழங்கப்படும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, 20.09.2023 அன்று நடைபெற்ற மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆட்சிப் பேரவைக் (Senate) கூட்டத்தில் பட்டமளிப்பு விழாவில் வழங்கப்படும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனினும் பட்டம் வழங்க  ஆளுநர் ரவி அனுமதி வழங்கவில்லை.

முன்னதாக ஆளுநர் திமுக அரசுக்கு இடையேயான மோதல் சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது. தமிழக சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்து பேசினார். இது மேலும் பரபரப்பை எற்படுத்தியது. இதைத்தொடர்ந்து ஆளுநர், மாநில அரசுக்கு எதிராக தீவிரமாக பேசி வருகிறார். திமுக அரசின் , திராவிட மாடல், சமூக நிதி, சாதியப் பாகுபாடு, சனாதனம் உள்ளிட்ட பல விவகாரங்களில் தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இந்த நிலையில், தமிழக அரசின் சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் கையெழுத்திட உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த பரபரப்பான சூழலில் சென்னையில் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில்  நடைபெறும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள வேண்டிய உயர்கல்வித்துறை  அமைச்சர் பொன்முடி, பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளார்.

முன்னதாக மதுரை காமராஜர் பல்கலை. மற்றும்  பட்டமளிப்பு விழாக்களுக்கு பொன்முடி செல்லாத நிலையில், தற்போது திறந்தநிலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவையும் புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.