சென்னை: உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மேகாலய மாநில உயர்நீதிமன்ற தலைமை  நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டதை மறு ஆய்வு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் கொலிஜியத்துக்கு 237 வழக்கறிஞர்கள் கடிதம் எழுதி உள்ளனர்.

உச்சநீதிமன்றத்தின் கொலிஜியத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்ஜிப் பானர்ஜியை, மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றவும்,  அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி முனிஸ்வர் நாத் பண்டாரியை, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யவும் பரிந்துரைத்துள்ளது.

இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சஞ்சிப் பானர்ஜி பல வழக்குகளில் மத்தியஅரசுக்கு எதிராக கருத்து தெரிவித்ததால், அவர், 4 நீதிபதிகளை கொண்ட மேகாலா மாநில உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. இது ஒருவகையான பதவி இறக்கம் என்றே கருதப்படுகிறது.

இந்த நிலையில்,   நீதிபதி சஞ்சீப் பானர்ஜியின் பணியிட மாற்றத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கோரி கொலிஜியத்துக்கு 237 வழக்கறிஞர்கள் கடிதம் எழுதியுள்ளனர். அதில்,  “துணிச்சல் மிக்க, சிறந்த ஆளுமை மிகுந்த ஒரு தலைமை நீதிபதியை சிறிய உயர்நீதிமன்றத்துக்கு பணியிடம் மாற்றும்போது அதன் நோக்கத்தை அறிய நீதித்துறையின் அங்கமான வழக்கறிஞர்களுக்கு உரிமை உள்ளது. அதன்படி,75 நீதிபகள் கொண்ட ஒரு உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை,மிகச்சிறிய மேகாலயா நீதிமன்றத்துக்கு மாற்றியுள்ளது பல கேள்விகளை எழுப்புகிறது.எனவே,தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அவர்களின் பணியிடமாற்றத்தை மறுஆய்வு செய்ய வேண்டும்”,என்று வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், கொலீஜியம் என்பது இந்திய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியுடன், உச்சநீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள் அடங்கிய குழுவாகும். இத்தேர்வுக்குழுவின் பணி, உச்சநீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளை தேர்ந்தெடுப்பதே. அவர்களை பணி மாற்றம் செய்வது அல்ல என்றும் தெரிவித்து உள்ளனர்.

ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை உயர்நீதி மன்ற நீதிபதியாக இருந்த தகில் ரமணி, மேகாலாயா உயர்நீதி மன்றத்துக்கு திடீரென மாற்றப்பட்டதும், அதை ஏற்க மறுத்து அவர் நீதிபதி பதவியை ராஜினாமா செய்ததும் குறிப்பிடத்தக்கது.