சென்னை

னி தொலைக்காட்சி விவாதங்களில் அதிமுகவினர் பங்கேற்க மாட்டார்கள் என அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

பல தனியார் தொலைக்காட்சிகள் குறிப்பாகச் செய்தி தொலைக்காட்சிகள் அனைத்து கட்சியினரையும் அழைத்து விவாதங்கள் செய்து வருகின்றன.  இந்த விவாதங்களில் பங்கு பெறும் கட்சி பிரமுகர்கள் அந்தந்த பிரச்சினைகளில் தங்கள் கட்சியின் கருத்துக்களை முன் வைப்பது வழக்கம்.  மேலும் தங்கள் கட்சி மீது குறை சொல்வோருக்குப் பதில் அளிப்பதும் வழக்கமான ஒன்றாகும்

இன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இணைந்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில், “மக்களின் அடிப்படைத் தேவைகள், தினசரி பிரச்சினைகள் பல இருக்கும் போது அதைப்பற்றி கவலைப்படாமல் ஜனநாயகத்தின் நான்காம் தூணாக விளங்க வேண்டிய ஊடகங்கள், அதிமுகவின் புகழுக்கு இழுக்கு ஏற்படும் வகையிலும் சிறுமைப்படுத்தும் நோக்கிலும் நிகழ்ச்சிகளின் தலைப்புக்களை வைக்கின்றன.  மேலும் இந்த நிகழ்வுகளில் அதிமுகவினர் மனதுக்கு வேதனை அளிக்கும் வகையில் பேசப்படுகிறது.

எனவே ஊடக விவாதங்களில் அதிமுக சார்பில் நிர்வாகிகளோ, செய்தி தொடர்பாளர்களோ மற்றும் கட்சியை சேர்ந்தவர்களோ யாரும் இனி பங்கேற்க மாட்டார்கள்.   ஆகவே அதிமுக பெயரை வேறு எந்த வகையிலும் பிரதிபலிக்கும் படி தங்கள் ஊடக வழியாகக் கருத்துக்கள் தெரிவிக்க அழைக்க வேண்டாம்.  மேலும் வேறு யாரையாவது அழைத்து அவர்களை அதிமுகவினர் என அடையாளப்படுத்த வேண்டாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.