ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாம்பட்டணத்தில் ஆனந்தய்யா என்ற பாரம்பரிய வைத்தியர் கொரோனாவுக்கு மூலிகை மருந்து தருவதாகவும் அதற்கு நல்ல பலன் ஏற்படுவதாகவும் கூறி ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டனர்.

ஏப்ரல் மாதம் 21 ம் தேதி ராம நவமி முதல் அந்த பகுதி மக்களுக்கு மருந்து கொடுத்து வரும் இவரை தேடி நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்ததை தொடர்ந்து, இந்த மருந்தை வழங்க மாவட்ட நிர்வாகம் அவருக்கு கடந்த வார இறுதியில் தடை விதித்தது.

தினமும் 4,000 முதல் 5,000 பேர் வரை இந்த ஊருக்கு மக்கள் படையெடுத்ததை தொடர்ந்து, முறையான ஆய்வு இல்லாமல் மூலிகை மருந்து வழங்கப்படுவதாக கூறி அதனை ஆய்வு கூடத்திற்கு அனுப்பிவைத்தனர்.

கொரோனா பாதிப்பு உள்ளானவரக்ளுக்கு மூன்று விதமான மூலிகை சூரணங்களும், பாதிப்பு இல்லாதவர்களுக்கு ஒரு சூரணம் மற்றும் உடலில் ஆக்சிஜன் அளவு அதிகரிக்க கண்ணுக்கு சொட்டு மருந்து என ஐந்து வகையான மருந்துகளை மக்களுக்கு இலவசமாக வழங்கி வந்ததை தொடர்ந்து இங்கு கூட்டம் அதிகரிக்க தொடங்கியது, தடை விதிக்கப்பட்ட பின்னும், மாநிலத்தின் பிற பகுதிகள் மட்டுமல்லாமல், வெளி மாநிலங்களில் இருந்தும் இங்கு வந்து குவிய ஆரம்பித்தனர்.

கக்கானி கோவர்தன ரெட்டி, எம்.எல்.ஏ. – வைத்தியர் ஆனந்தய்யா

இதனை தொடர்ந்து அந்த பகுதி எம்.எல்.ஏ. கக்கானி கோவர்தன ரெட்டி இந்த மூலிகை மருந்து வழங்குவதை நேற்று மீண்டும் தொடங்கி வைத்தார்.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கோவர்தன ரெட்டி சர்வபள்ளி தொகுதியின் எம்.எல்.ஏ. வாக இருக்கிறார், “இது மக்களின் நம்பிக்கை சார்ந்த விஷயமாக இருக்கிறது, மேலும் இந்த மூலிகை மருந்து நல்ல பலனை தருகிறதா அல்லது விபரீதம் எதுவும் ஏற்படுமா என்பது தெரியவில்லை” என்று கூறினார்.

மேலும், “மக்களின் கோரிக்கையை ஏற்று இன்று ஒருநாள் மட்டும் இந்த மருந்து வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்தார். இந்த மருந்து தயாரிக்க இரண்டு முதல் மூன்று நாட்கள் ஆகும் என்பதால், இரண்டு நாட்கள் கழித்துதான் மீண்டும் இந்த மருந்து வழங்கப்படுமா என்பது தெரியவரும்.

நேற்று இந்த மருந்தை வாங்க 10,000 க்கும் அதிகமானோர் சமூக இடைவெளி இன்றி இங்கு கூடினர், மிகவும் கவலைக்கிடமான நோயாளிகள் கூட ஆம்புலன்ஸ் வாகனங்களில் வந்து காத்திருந்தனர், இது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.