சென்னை: திருமணச் சான்றிதழை இனி ஆன்லைனிலேயே திருத்தம் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. இதன் காரணமாக இனிமேல், திருமண சான்றிதழ் திருத்தங்களுக்காக சார்பதிவாளர் அலுவலகம் செல்ல அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகஅரசின் இந்த நடவடிக்கை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் திருமண பதிவு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு திருமண பதிவு ஏற்கனவே விருப்பத்தின் அடிப்படையில் இருந்த நிலையில் . கடந்த 2009 கொண்டு வரப்பட்ட திருத்தச் சட்டப்படி, திருமண பந்தத்திற்குள் நுழையும் தம்பதி திருமணத்தை பதிவு செய்வது கட்டாயம். அப்போதுதான் அவர்களின் திருமணம் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும். மேலும், திருமணம் நடந்த 90 நாட்களுக்குள் திருமணத்தை பதிவு செய்ய வேண்டும் . அப்படி செய்யாவிட்டால் அபராதம் விதிக்கப்படும்.
இதுவரை திருமணத்தைப் பதிவுசெய்ய அசல் ஆவணங்களுடன் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு நேரில் செல்ல வேண்டும் நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும், திருமணச் சான்றிதழில் சிறுசிறு திருத்தங்கள் செய்ய வேண்டுமானாலும் கூட சார்பதிவாளர் அலுவலகத்துக்கு நேரில் சென்று அதை மாற்ற வேண்டும். இதனால் காலவிரயம் மட்டுமின்றி, லஞ்ச லாவன்யமும் தலைவிரித்தாடியது.
இந்த நிலையில், திருமண சான்றிதழை இணையதளம் வழியாக திருத்தம் செய்யும் வசதியை அறிமுகம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளதால் சான்றிதழில் திருத்தம் செய்வதற்கு இனி சார்பதிவாளர் அலுவலகம் செல்ல தேவையில்லை. திருமணம் முடிந்த தம்பதிகள் https://tnreginet.gov.in/portal/ என்ற இணையதளத்தின் மூலம் பயனர் பதிவை உருவாக்கி திருமண பதிவு செய்து கொள்ளலாம் என அறிவித்து உள்ளது.
இதன் காரணமாக இனிமேல் திருமண பதிவு, மற்றும் திருத்தங்களுக்காக சார்பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டிய சூழல் இல்லை என்ற நிலை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகஅரசின் அசத்தலான நடவடிக்கை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.