கவுகாத்தி: விளையாட்டுத் துறையின் உயர்ந்த விருதான ‘கேல் ரத்னா’ விருதுக்கு, இந்தியாவின் தடகள நட்சத்திரம் ஹிமா தாஸ் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தற்போது 20 வயது நிரம்பிய ஹிமா தாஸ், தடகளம் சார்பில் இந்தியாவிற்காக அதிகம் சாதித்தவர். கடந்த 2018ம் ஆண்டு 20 வயதுக்குட்பட்டோர் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றவர். அதே ஆண்டில் அர்ஜுனா விருதையும் வென்றார்.

கடந்த 2019ம் ஆண்டு, பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, வெறும் 19 நாட்களில் 5 தங்கங்களை வென்று, அனைவரின் ஆச்சர்யங்களையும் அள்ளிச் சென்றார்.

இதனையடுத்து, இவரின் பெயர் தற்போது, விளையாட்டிற்கான உயர்ந்த விருதான கேல் ரத்னா விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்ட இளம் வயது வீராங்கனை என்ற பெருமை, இதன்மூலம் இவருக்கு கிடைத்துள்ளது.

கேல் ரத்னா விருதுக்கு ஏற்கனவே நீரஜ் சோப்ரா(ஈட்டி எறிதல்), ராணி ராம்பால்(ஹாக்கி), மணிகா பத்ரா(டேபிள் டென்னிஸ்), வினேஷ் போகத்(மல்யுத்தம்), ரோகித் ஷர்மா(கிரிக்கெட்) ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், கடும் போட்டிக்கிடையில் ஹிமா தாஸுக்கு இந்த விருது கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு கூடியுள்ளது.