சென்னை: இரு சக்கர வாகனத்தின் பின்னாடி உட்காருபவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது பின்னால் அமர்ந்திருப்பவர்களும் ஹெல்மெட் போட வேண்டும் என நீதிமன்றம் அறிவித்து உள்ளது. அதைத்தொடர்ந்து மாநில அரசுகளும் ஹெல்மெட் கட்டாயம் என அறிவித்து உள்ளன. மேலும், 9 மாதம் முதல் 4 வயது வரையுள்ள குழந்தைகளும் தலைக்கவசம் அணிந்திருப்பதை கட்டாயமாக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. குழந்தைகளுக்கான சாலை பாதுகாப்பு குறித்த புதிய வரைவு விதிகளை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இந்த நிலையில், இனிமேல் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என சென்னை மாநகர  போக்குவரத்து காவல்துறை தெரிவித்திருக்கிறது. அதன்படி,

ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு ரூ.2,000 அபராதம்

வாகன ஓட்டி ஹெல்மெட்டை அணிந்து, அதற்கான buckle (லாக் முடிச்சை) அணியவில்லை என்றால் அவருக்கு ரூ.1,000 அபராதம்

தரச்சான்று (BSI Bureau of Indian Standards)  இல்லாத ஹெல்மெட் அணிந்தால் அந்த நபருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்

டிராபிக் சிக்னலில் விதிமுறைகளை பின்பற்றாமல் நிற்காமல் செல்லும் நபர்களுக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும்

இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர், சென்னை மாநகரில் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்கவும், போக்குவரத்து விதிகளை அனைவரும் கடைபிடிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்ற னர். இது தொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை அதிகாரிகள் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் சிறப்பு வாகன தணிக்கைகளை நடத்தி வாகன விதி மீறுபவர்களை கண்காணித்தும், போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பதை மேம்படுத்துவதற்காகவும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகள் மற்றும் பின்னிருக்கை நபரின் மீது வழக்குப் பதிவு செய்தும் வருகின்றனர்.

சென்னை பெருநகரில் பகுப்பாய்வு செய்ததில் 01.01.2022 முதல் 15.05.2022 வரையிலான காலப்பகுதியில் இரு சக்கர வாகன விபத்துக்களில் 98 பேர் உயிரிழந்து உள்ளனர் மற்றும் 841 பேர் காயம் அடைந்துள்ளனர். இதில் ஹெல்மெட் அணியாமல் பயணித்ததில் 80 பேர் மோட்டார் சைக்கிள் ஓட்டியவர்கள் மற்றும் 18 பேர் பின்னிருக்கை இருந்தவர்கள் உயிரிழந்தனர் . 714 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் 127 பின்னிருக்கை பயணிகள் காயமடைந்துள்ளனர்.

எனவே, விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், குறைக்கவும், 23.05.2022 திங்கட்கிழமை முதல் சென்னை பெருநகர காவல்துறை இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னிருக்கை நபரும் ஹெல்மெட் விதிகளைக் கடைபிடிப்பதை உறுதி செய்வதற்கான சிறப்பு வாகன தணிக்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள் மற்றும் பின்னிருக்கை நபர் மீதும் மோட்டார் வாகன சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து, விலைமதிப்பற்ற மனித உயிர்களைக் காக்கவும், விபத்தில்லா நகரை உருவாக்கவும் சென்னை காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்”.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.