டெல்லி நோக்கி விவசாயிகள் படையெடுப்பதை தடுக்க ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநில எல்லையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தவிர, 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதை அடுத்து ஊர்வலம் மற்றும் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லி எல்லையை ஒட்டிய ஹரியானா மாநிலத்தின் ஆறு மாவட்டங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் டெல்லி நோக்கி விவசாயிகள் அணிவகுப்பதை தடுக்க மாநில காவல்துறை தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

டெல்லி நோக்கி பேரணி செல்லவுள்ள 70 க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தங்களது போராட்டம் அமைதியான முறையில் நடைபெறுவதை தடுக்கவும் டெல்லி நோக்கி செல்வதை முடக்கவும் முயற்சி செய்தால் தங்கள் போராட்டம் தீவிரமடையும் என்று எச்சரித்துள்ளது.

இதனால் டெல்லிக்குள் நுழையும் அனைத்து முக்கிய சாலைகளும் மூடப்பட்டு கான்கிரீட் சுவர் எழுப்பப்பட்டுள்ளது.

ஏற்கனவே மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் விவசாய விளைபொருளுக்கான ஆதார விலை, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகள் வாபஸ், போராட்டத்தில் உயிரிழந்தர்வகளுக்கு உரிய இழப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மத்திய அரசு உறுதி அளித்திருந்தது.

இரண்டு ஆண்டுகளாகியும் மத்திய அரசின் இந்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படாததை அடுத்து டெல்லி நோக்கி பேரணி நடத்த விவசாய சங்கங்கள் தீர்மானித்துள்ளது.

இதனால் டெல்லியில் மீண்டும் விவசாயிகள் முற்றுகையிட வாய்ப்பிருப்பதை அடுத்து இன்டர்நெட் உள்ளிட்ட சேவைகளை முடக்கியுள்ள மத்திய அரசு போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை முடக்கவும் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்துபவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.