சென்னை: கனமழை பாதிப்பு காரணமாக, கடுமையான பயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களில்  முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொள்கிறார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை உள்பட பல மாவட்டங்களில் பரவலாக மிதமானது முதல் கனமழை பெய்தது. இதனால்,  ஏரிகள், குளங்கள் நிரம்பி, உபரிநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.  தொடர் கனமழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கிய நிலையில் சென்னை தீவுபோல காட்சி அளித்தது. இதுமட்டுமின்றி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்பட பல மாவட்டங்களில் மழை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில்,  டெல்டா மாவட்டங்களிலும் சேதங்களை ஏற்படுத்தி உள்ளது. மழைநீர் மற்றும் ஏரி குளங்களில் இருந்து வெளியான உபரி நீரால் நெல்வயல்கள் மூழ்கின. இதனால் அறுவடைக்கு காத்திருந்த லட்சக்கணக்கான ஏக்கர் வயல்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதையடுத்து கனமழையால் சென்னையில் 4 நாட்கள் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், நேற்று செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டார். இரவு புதுச்சேரியில் தங்கினார்.  அதைத்தொடர்ந்து, இன்று 6வது நாளாக டெல்டா மாவட்டங்களில்  இன்று ஆய்வு செய்ய உள்ளார்.

இன்று (சனிக்கிழமை) காலை புதுச்சேரியில் இருந்து காரில் புறப்படும் புறப்பட்டு டெல்டா மாவட்டங்களான கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் கனமழையினால் பாதிக்கப்பட்ட பயிர் சேதங்களை பார்வையிடுகிறார்.

காலை 7.30 மணி முதல் கடலூர் மாவட்டம் அரங்கமங்கலம், அடூர் அகரம் பகுதியில் ஆய்வு மேற்கொள்கிறார்.

காலை 9.30 மணி முதல் மயிலாடுதுறை மாவட்டம் இருக்கூர், தரங்கம்பாடி பகுதிகளில் பார்வையிடுகிறார்.

முற்பகல்  11.30 மணி முதல் நாகப்பட்டினம் மாவட்டம் கருங்கனி, அருந்தவபுலம் பகுதிகளிலும்,  திருவாரூர் மாவட்டம் ராயநல்லூர், புழுதிக்குடி பகுதிகளிலும்,

மாலை 3.30 மணி முதல் தஞ்சாவூர் மாவட்டம் பெரியக்கோட்டை பகுதியிலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்கிறார்.