சென்னை: தமிழகத்தில் 10, 11ம் தேதிகளில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை தொடரும் அதி கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

வங்கக்கடலில் இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது.காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நவம்பர் 10 மற்றும் நவம்பர் 11ம் தேதி கன மழை முதல் மிதமான மழை பெய்யும். அதிக கனமழை காரணமாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் புதுச்சேரி, விழுப்புரம் மாவட்டங்களில் இன்று முதல் 12ந்தேதி வரை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியிருக்கும் நிலையில், இன்றும் நாளையும் டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, ராமநாத புரம், காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கடலூர், மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, விழுப்புரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. சென்னையை பொருத்தவரை 2 நாட்களுக்கு கனமழை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 11ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி மண்டலமாக மாறி வட தமிழக கடற்கரைக்கு அருகே வரக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலை யில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தெற்கு ஆந்திர தமிழக கடற்கரையை ஒட்டியை பகுதிகள், இலங்கை கடற்கரை பகுதிகள், குமரிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கும், மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்லவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.