சென்னை: காவிரி விவகாரத்தில் இதுவரையில் இருந்த எந்த அரசும் கர்நாடக அரசும், இவ்வுளவு முரண்பிடித்தது இல்லை, ஆனால், தற்போதைய கர்நாடக காங்கிரஸ் அரசு எதிரிநாட்டுடன் மோதுவதுபோல் முரண்பிடிக்கிறது என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்து உள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி வந்ததும், தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய காவிரி நீரை தர மறுத்து வருகிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு மத்தியஅரசு மற்றும் உச்சநீதிமன்றத்தை நாடியது. மத்தியஅரசும், உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டும் கர்நாடக மாநில அரசு தண்ணீரை திறந்துவிட மறுத்து வருகிறது. இந்த நிலையில் அக்டோபர் 30ந்தேதி மீண்டும் கூடிய காவிரி ஒழுங்காற்று குழு, காவிரி ஆற்றில் இருந்து விநாடிக்கு 2600 கன அடி தண்ணீர் தமிழ்நாட்டுக்கு திறக்க பரிந்துரைத்தது. ஆனால், இதை ஏற்க கர்நாடக மாநில அரசு மறுத்து வருகிறது.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், காவிரி ஒழுங்காற்றுக் குழு ஒழுங்காக ஆற்றவில்லை. நாங்கள் நாள் ஒன்றுக்கு 13 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று கேட்டோம். ஆனால் காவிரி ஒழுங்காற்றுக் குழு வெறும் 2600 கன அடி தண்ணீரை மட்டுமே திறந்துவிடுவோம் என்று சொல்லி உள்ளார்கள்.
இதுபோதாது என்பதுதான் எங்கள் கருத்து. காவிரி மேலாண்மை வாரியம் வரும் 3ஆம் தேதி கூடுகிறது. அவர்களிடம் இந்த பிரச்னையை எடுத்து செல்வோம். அங்கும் தீர்வு கிடைக்காவிட்டால் நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம்.
கடந்த 1-6-2023 முதல் 26-10-2023 வரை கர்நாடக தமிழ்நாட்டுக்கு 140 டிஎம்சி தண்ணீரை தந்து இருக்க வேண்டும். ஆனால் வெறும் 56.4 டிஎம்சி தண்ணீரை மட்டுமே கொடுத்துள்ளனர். இன்னும் 83.6 டிஎம்சி தண்ணீர் வர வேண்டி உள்ளது.
நவம்பரில் தர வேண்டிய 16.44 டிஎம்சி தண்ணீரையும் கர்நாடகா இன்னும் தரவில்லை. இதுவரையில் இருந்து எந்த அரசும் இவ்வுளவு முரண்பிடித்தது இல்லை. ஏதோ எதிரிநாட்டுடன் மோதுவதுபோல் முரண்பிடிக்கிறார்கள்.
ஏதோ சலுகை கேட்பதாக கருதுகிறார்கள். இந்த நாட்டின் உச்சநீதிமன்றம் விதித்த விதிப்படிதான் நாட்டு மக்கள் நடக்கவேண்டும். ஆனால் அரசே அப்படி நடக்கமாட்டேன் என்று சொல்வது ஜனநாயகத்திற்கு நல்லது அல்ல.
20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த துறையை நான் பார்த்துள்ளேன். கர்நாடகாவில் 10க்கும் மேற்பட்ட முதலமைச்சர்கள், அமைச்சர் களை நான் பார்த்துள்ளேன். சித்தராமையா முதலமைச்சராக உள்ளார். எனக்கும் தலைவருக்கும் வேண்டியவர், நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமாரும் எனக்கு வேண்டியவர்தான். ஆனால் அவர்கள் இவ்வுளவு பிடிவாதமாக இருப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
வரும் 3ஆம்தேதி நடக்க உள்ள கூட்டத்தில் தண்ணீர் தர கோரி வலியுறுத்துவோம். இதில் மத்தியஅரசு அதிகாரிகள் சற்று மெத்தனம் காட்டு கிறார்கள் என கூறினார்
ஆளுநர் மாளிகை சாலையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் ஆளுநர் அரசியல் செய்கிறாரா என செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, இது ஒரு ஜனநாயக நாடு; இந்த நாட்டுக்கென்று அரசியல் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. பெரியவர்களாக இருக்கும் காரணத்தாலேயே அரசியல் சட்டப்படி நடக்கமாட்டேன் என்று சொல்வது தவறானது. பெரிய பொறுப்பில் இருப்பவர்களே சட்டத்தை மதிக்கமாட்டேன் என்று சொன்னால் எப்படி மற்றவர்கள் சட்டத்தை மதிப்பார்கள் என கூறினார்.
காவிரி நீர் விவகாரம்: நவம்பர் 3ம் தேதி மீண்டும் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்..
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க இயலாது! கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு மீண்டும் பிடிவாதம்…