டில்லி

பொதுமக்கள் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களுக்கு உணவளிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

நாடெங்கும் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களால் மக்களுக்கு ஆபத்து ஏற்படுவது அதிகரித்து வருகிறது.    தற்போது விலங்கியல் ஆர்வலர்களின் வலியுறுத்தல் காரணமாக இவற்றை உள்ளாட்சி அமைப்புக்கள் பிடித்துச் செல்வது அடியோடு நின்றுள்ளதாகவும் இதனால் மக்களுக்கு ஆபத்து அதிகரித்துள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையொட்டி டில்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது   வழக்கு விசாரணையின் போது பொது மக்கள் தெருநாய்களுக்கு பொது இடங்களில் உணவளிப்பதால் அவை பெருகி வருவதாகவும் இதனால் மக்களுக்கு ஆபத்து உண்டாகும் எனவும் வாதிடப்பட்டது. 

 டில்லி உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் “அனைத்து தெரு நாய்களுக்கும் உணவைப் பெற உரிமை உண்டு.  இதைப் போல் பொதுமக்களுக்குத் தெரு நாய்களுக்கு உணவளிக்கும் உரிமை உண்டு என்பதால் அதைத் தடை செய்ய முடியாது.  ஆனால் மக்கள் இந்த உரிமையைப் பயன்படுத்துவதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” எனத் தீர்ப்பு அளித்தது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மேல்முறையீடு செய்தன.  நேற்று இந்த மேல் முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் வினீத் சரண் மற்றும் அனிருத்தா போஸ் அமர்வு விசாரணை செய்தது  

இந்திய விலங்குகள் நல வாரியம் இதற்கு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   மேலும் இந்த பதில் 6 வாரங்களுக்குள் அளிக்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் அதுவரையில் பொதுமக்கள் தெருநாய்களுக்கு உணவளிக்கக் கூடாது எனத் தடை விதித்துள்ளனர்.