சென்னை

ரசு சொத்துக்களின் வாடகை பாக்கியை வசூலிக்காத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசுக்குச் சொந்தமான ஒரு வணிக வளாகம் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பிரதான சாலையில் சேதமடைந்த நிலையில் இருந்ததால், அதை இடித்து விட்டு புதிதாகக் கட்ட முடிவு செய்யப்பட்டது.  இதனால் வளாகத்தில் உள்ள கடைகளை காலி செய்யும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதை எதிர்த்து அங்குக் கடை நடத்தி வந்த அஷ்வக் அகமது, பவன்குமார் ஜெயின் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கில், “கட்டிடம் சேதமடையவில்லை. முறையாக வாடகை செலுத்தி வருகிறோம். எனவே, கடைகளை காலி செய்யக் கூறி அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய வேண்டும்” எனக் கோரியிருந்தனர்.  வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது.

விசாரணையில் ஓசூர் சார் ஆட்சியர் தரப்பில், மனுதாரர்கள் இருவரும் எந்த உரிமமும் இல்லாமல் தொடர்ந்து 30 ஆண்டுகளாகக் கடை நடத்தி வருகின்றனர். மேலும், இவர்கள் முறையாக வாடகை செலுத்துவதில்லை” என்று கூறப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “கட்டிடம் சேதமடைந்துள்ள நிலையில் கடையை நடத்த அனுமதிப்பது ஆலோசனைக்கு உரியதல்ல. மனுதாரர்கள் இருவரும் சட்டவிரோதமாக 30 ஆண்டுகள் கடைகளை நடத்தி வருவதால், சார் ஆட்சியர் அனுப்பிய நோட்டீஸில் எந்தப் பிழையும் இல்லை எனக் கூறி, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், அரசு வருவாயைப் பாதுகாக்க வேண்டியது அதிகாரிகளின் கடமை. குத்தகை  சொத்துக்களின் வாடகை பாக்கி’யை வசூலிக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.