அதிர்ச்சி-தலித் மணமகனுக்கு உரிமையில்லையாம்- ராஜ்புத்களின் சாதிவெறி

Must read

சண்டிகர்,

அரியானாவில் திருமண சடங்கின்போது தலித் மணமகனை உயர் சாதியினர் கடுமையாக தாக்கியச் சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது.

அரியானாவிலிருக்கும் சார்கிதாத்ரி மாவட்டம் சஞ்சர்வாஸ் கிராமத்தில்தான் நேற்றுமுன்தினம் இந்தக்கொடூரச் சம்பவம் நடந்தது.

இந்தக் கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் என்ற தலித் இளைஞருக்கு திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்தது.

திருமணத்தை முன்னிட்டு மணமகனும் அவரது குடும்பத்தினரும் செவ்வாயன்று சஞ்சர்வாஸ் கிராமத்துக்கு வந்துள்ளனர். திருமணத்துக்கு முன்னதாக மணமகன் தன்னை அலங்கரித்துக் கொண்டு குதிரையில் ஏறி ஊர்வலமாக வந்தார். இது பாரம்பரியமாக இருந்து வரும் வழக்கமாகும்.

மணமகன் ஊர்வலம் சிறிது தூரம் சென்றதும் திடீரென்று அங்குவந்த ராஜ்புத் உயர்சாதியைச் சேர்ந்த கும்பல், மணமகனை குதிரையிலிருந்து கீழே தள்ளிவிட்டு தலித்துக்கு குதிரையில் செல்லும் உரிமை இல்லை என்று சொல்லிக்கொண்டே தாக்க தொடங்கியது. தடுக்கவந்த திருமண வீட்டாரையும் அந்தக் கும்பல் விடவில்லை. தகவல் அறிந்து போலீசார் வந்ததும் அந்தக் கும்பல் ஓட்டம் பிடித்தது.

பலத்த காயமடைந்த மணமகன் சஞ்சய்க்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் திருமணம் நடைபெற்றது. இப்பிரச்னை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

 

More articles

Latest article