சண்டிகர்:

ஹரியானா மாநிலத்தில் கடந்த வாரம் பாலியல் பலாத்கார சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்தன. இதற்கு முதல்வர் மனோகர் லால் கத்தார் வருத்தம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று நடந்த புதிய கர்னல் சர்க்கரை ஆலைக்கு அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்ட அவர் பேசுகையில், ‘‘பாலியல் பலாத்கார சம்பவங்கள் எனக்கு பெருத்த வலியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் போலீசார் இந்த வழக்குகளை விசாரித்து வருகின்றனர். 12 வயது வரையிலான சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளை தூக்கிலிடும் வகையில் சட்டம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதோடு பாலியல் பலாத்கார வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில் விரைவு நீதிமன்றங்களை ஏற்படுத்துவது குறித்து நீதித்துறையுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஆட்சியோடு ஒப்பிடுகையில் சட்டம் ஒழுங்கு நிலை 3 ஆண்டுகளாக நல்ல நிலையில் உள்ளது. முன்பு வழக்கு பதிவு செய்வதற்கு மக்கள் தலை முதல் கால் வரை அலைந்து திரிந்தனர். ஆனால், தற்போது இவை எளிதாக நடக்கிறது’’ என்றார்.