நீதிபதிகள் பேட்டி எதிரொலி….அமித்ஷா வழக்கு நீதிபதி மர்ம மரண விசாரணை அமர்வில் மாற்றம்

Must read

டில்லி:

உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் 4 பேர் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி பேட்டியளித்து பரபரப்பை ஏற்படுத்தினர். இதை தொடர்ந்து போலி என்கவுண்ட்டர் வழக்கை விசாரித்து வந்த மும்பை சிபிஐ நீதிமன்ற நீதிபதி பி.ஹெச்.லோயா மர்ம மரண வழக்கை விசாரிக்கும் அமர்வு தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

முன்பு  நீதிபதி  அருண்  மிஸ்ரா உள்பட 2 நீதிபதிகள் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. தற்போது தலைமை நீதிபதி தலைமையில் நீதிபதிகள் கான்வில்கர், சந்திரசுத் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமர்வு காங்கிரஸ் தலைவர் தெக்சீன் பூனவாலா மற்றும் பத்திரிக்கையாளர் லோனே தாக்கல் செய்து அந்த மனுவை விசாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 22ம் தேதி இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தலைமை நீதிபதி தெரிவித்தார். ஏற்கனவே இந்த வழக்கில் ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு மகாராஷ்டிரா அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் பாஜக தலைவர் அமித்ஷா மீது குற்றம்சாட்டப்பட்டது. பின்னர் அமித்ஷாவை இந்த வழக்கில் இருந்து விடுவித்து மும்பை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி லோயா தான் மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.

அமித்ஷா விடுவிப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்படாமல் உள்ளது. மேல் முறையீடு செய்ய சிபிஐ.க்கு உத்தரவிடுமாறு மும்பை உயர்நீதிமன்றத்தில் வக்கீல்கள் சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுவும் விரைவில் விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article