
குர்கான்
அரியானாவை ஆளும் பாஜக அரசு வாக்களர்களைக் கவர வீட்டு வரிக்கு விலக்கு அளிக்க உள்ளது.
வரும் 2019ஆம் வருடம் பாராளுமன்றத்துக்கு பொதுத் தேர்தல் நடைபெற உள்ளன. கடந்த முறை வெற்றி பெற்று அரசு அமைத்த பாஜக அரசு மீண்டும் அரசமைக்க பல திட்டங்களை தீட்டி வருகிறது. அதற்கு உதவுவது போல் பல மாநிலங்களிலும் பாஜக அரசு செய்து வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஓட்டுக்காக பல புதிய நலத் திட்டங்கள் அறிவிக்கப்படுவது தொடர்ந்து வருகிறது.
அதில் ஒரு கட்டமாக அரியானாவை ஆளும் பாஜக அரசு வீட்டு வரிக்கு விலக்கு அளிக்க உத்தேசித்துள்ளது. முதல் கட்டமாக குர்கான் நகரசபை இந்த தீர்மானத்தை நிறைவேற்று உள்ளது. அதன் பிறகு அனைத்து நகராட்சிகளுக்கும் அது விரிவாக்கப்படும் என தெரிய வந்துள்ளது.
குர்கான் நகர மேயர் மது ஆசாத். “இன்று (ஏழாம் தேதி) நகராட்சிக் கூட்டம் கூட உள்ளது. அதில் வீட்டு வரி விலக்கு மசோதா இயற்றப்பட உள்ளது. அது நிறைவேற்றப் படும் என நம்புகிறேன். இந்த வரிவிலக்கு 900 சதுர அடிவரை உள்ள வீடுகளுக்கும் குடியிருப்புக்களுக்கும் வழங்கப்பட உள்ளது
கடந்த 2008ஆம் ஆண்டில் இருந்தே இந்த நகாராட்சிக்கு பொதுமக்கள் வீட்டு வரி விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது அந்த கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக இந்த மசோதா இயற்றப்பட உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அரியானா மாநில அரசியல் நோக்கர்கள், “நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் பலர் 900 சதுர அடிக்குள் உள்ள வீடுகளில் தான் வசிக்கின்றனர். இது அரசியல் வாதிகள் நன்கு அறிவார்கள். எனவே பெரும்பான்மையான வாக்களார்களைக் கவரவே இந்த திட்டம் இயற்றப்பட உள்ளது” என தெரிவித்துள்ளனர்.