சென்னை: நீதிபதிகள் மீது ஆதாரமற்ற கருத்து வெளியிடும் யூடியூப் சேனல்கள்; முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்  என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்தில், பெண் வழக்கறிஞர், நீதிபதிக்கு எதிராக சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்டதாக ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரது ஜாமின் மனுமீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில்  நீதிபதி தண்டபாணி முன்னிலையில் இன்று விசாரணை நடைபெற்றது. விசாரணையின்போது, எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் இழிவான கருத்துகள், நேர்காணல்களை வெளியிடும் யூடியூப் சேனல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபிக்கு உத்தரவிட்டனர்.

மேலும், நீதிபதிகள், அரசியல் சாசன பதவி வகிப்பவர்கள் மீது ஆதாரமற்ற கருத்து வெளியிடும் யூடியூப் சேனல்கள் மீது கடும் நடவடிக்கை தேவை. மலிவான விளம்பரத்துக்காக இது போன்ற செயல்களில் ஈடுபடுவோரை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். சமூக ஒழுக்கம், நல்லிணக்கத்தை பராமரிக்க நீதித்துறை தனது அதிகாரத்தை பயன்படுத்த வேண்டிய நேரம் இது என்றவர்,  இணையதள குற்றங்களை கண்காணிக்க சிறப்பு பிரிவு அமைக்கவும் வேண்டும் என காவல்துறைக்கு அறிவுறுத்தியதுடன்,  வழக்கின் விசாரணையை நவம்பர் 2ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.