சென்னை

சென்னையில் உள்ள குடிசைவாசிகளுக்கு அரைக் கிலோ பிளீச்சிங் பவுடர் இலவசமாக வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி வளாகமான ரிப்பன் மாளிகையில் நடமாடும் மருத்துவ வாகனங்கள் தொடக்க விழா நடந்தது.  இந்த வாகனங்களை தமிழக சுகாதார அமைச்சர் மா சுப்ரமணியன், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.  இந்த விழாவில் மத்திய சென்னை மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், தலைமைச் செயலர் இறையன்பு உள்ளிட்ட பலர் பங்கு பெற்றனர்.

நிகழ்வுக்கு பிறகு சுகாதார அமைச்சர் மா சுப்ரமணியன் செய்தியாளர்களிடம், “தமிழகம் முழுவதும் மழைக்காலங்களில் நோய்த் தொற்று பரவாமல் தடுக்க 5 ஆயிரம் மருத்துவ முகாம்கள் தொடங்க திட்டமிடப்பட்டது. தற்போது மருத்துவ முகாம்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதுபோன்ற அதிகபட்சமான மருத்துவ முகாம்கள் தமிழகத்தில் தற்பொழுது தான் நடத்தப்படுகிறது.

சென்னை குடிசைப்பகுதிகளில் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் பிளீச்சிங் பவுடர்கள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் அரை கிலோ வீதம் வழங்கப்பட உள்ளது. மாநகராட்சியில் சுமார் 4 லட்சத்து 16,000 குளோரின் மாத்திரைகளும், தமிழகத்தில் ரூ.167 கோடி அளவிலான மருந்து, மாத்திரைகள் கையிருப்பில் உள்ளன.

இன்று கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இன்று 8-வது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில் நடைபெறவுள்ளன. இதில் சென்னையில் மட்டும் 2 ஆயிரம் இடங்களில் முகாம்  நடைபெற உள்ளது.  ஆகவே அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.”எனத் தெரிவித்தார்.