சென்னை:

குட்கா விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், டிஜிபியை பதவி விலக வலியுறுத்தி திமுகவினர் இன்று டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக வந்த ரகசிய தகவலை தொடர்ந்து சென்னை கடற்கரையில் உள்ள டிஜிபி அலுவலகத்தை சுற்றி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் தலைமையில்  திமுகவினர் முற்றுகையிட திட்டமிட்டுள்ளதாக உறுதிப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரூ.40 கோடி அளவிலான குட்கா ஊழலில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் உள்பட காவல்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. மேலும் திமுக செயல்தலைவர் ஸ்டாலினும் இந்த விவகாரம் குறித்து சிபிஐக்கு உடனே கடிதம் எழுதி உள்ளார்.

இந்நிலையில், குட்கா விவகாரத்தில்  டிஜிபி ராஜேந்திரனுக்கு தொடர்பு இருப்பதால், அவரை  பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி திமுகவினர் போராட்டம் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக டிஜிபி அலுவலகம் மற்றும் மெரினாவில்  ஏராளமான போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. டிஜிபி அலுவலகத்தின் அனைத்து வாயில்களும் மூடப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.