ரன்வீர் சிங், ஆலியா பட் நடிப்பில் ஸோயா அக்தர் இயக்கிய படம் – கல்லி பாய், இந்தியா சார்பாக சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சிறந்த வெளிநாட்டுத் திரைப்படங்களுக்கான ஆஸ்கர் விருதைப் பெறுவதற்கு 28 இந்தியப் படங்கள் போட்டியிட்டன. அந்த 28 படங்களிலிருந்து ஒரு படத்தை இந்தியா சார்பாகத் தேர்வு செய்வதற்கான பணி முதல்முறையாக கொல்கத்தாவில் நடைபெற்றது. சூப்பர் டீலக்ஸ், த்த செருப்பு, வட சென்னை ஆகிய மூன்று தமிழ்ப் படங்களும் போட்டியிட்டன. 9 தேசிய விருதுகள் பெற்ற வங்காள இயக்குநர் அபர்ணா சென், தேர்வுக்குழுவின் தலைவராகச் செயல்பட்டார்.

இந்நிலையில் ரன்வீர் சிங், ஆலியா பட் நடிப்பில் ஸோயா அக்தர் இயக்கிய ஹிந்திப் படமான கல்லி பாய் தேர்வாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

மதர் இந்தியா, சலாம் பாம்பே, லகான் ஆகிய மூன்று இந்தியப் படங்களே ஆஸ்கர் விருதுக்கு (டாப் 5) இதுவரை பரிந்துரைக்கப்பட்டுள்ளன. எனினும் அந்த மூன்று படங்களும் ஆஸ்கர் விருதைப் பெறவில்லை. இதையடுத்து சிறந்த வெளிநாட்டுத் திரைப்படங்களுக்கான ஆஸ்கர் விருதை இதுவரை எந்தவொரு இந்தியப் படமும் பெறவில்லை என்கிற நிலைமை கடந்த வருடம் வரை தொடர்கிறது. கல்லி பாய் திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைக்கும் பட்சத்தில், அந்நிலை மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.