கமதாபாத்

ற்றுமைச் சிலை அருகே உள்ள நிலங்களை கையகப்படுத்த குஜராத் உயர்நீதிமன்றம் மாநில அரசுக்கு தடை விதித்துள்ளது.

குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் உலகின் மிக உயரமான சர்தார் படேல் சிலை அமைந்துள்ளது.   ஒற்றுமைச் சிலை என அழைக்கப்படும் இந்த சிலை 182 மீட்டர் உயரமுள்ளதாகும்.    இந்த சிலை அமைந்துள்ள இடத்தில் உள்ள சர்தார் சரோவர் அணை மற்றும் சிலையை சர்தார் சரோவர் நர்மதா நிகம் என்னும் அரசு நிறுவனம் நிர்வகித்து வருகிறது.

இந்த சிலை அருகே காவடியா, வாகடியா, நவாகம், லிம்பிடி, கோத்தி மற்றும் கோரா ஆகிய சிற்றூர்கள் உள்ளன.  இங்கு சுமார் 5000 க்கும் மேற்பட்ட பழங்குடியினர் வசித்து வருகின்றனர்.  இந்த இடங்களைக் கையகப்படுத்தி இங்குள்ளவர்களை வேறு இடங்களுக்கு மாற்ற குஜராத் மாநில அரசு முயற்சித்து வருகிறது.    இதை எதிர்த்து மகேஷ் பாண்டியா என்னும் ஆர்வலர் பொதுநல வழக்கு ஒன்றை குஜராத் உயர்நீதிமன்றத்தில் தொடுத்துள்ளார்.

அந்த மனுவில் மகேஷ் பாண்டியா, “அரசு மற்றும் சர்தார் சரோவர் நர்மதா நிகம் இணைந்து இந்த ஆறு கிராமங்களில் உள்ள 5000க்கும் மேற்பட்ட பழங்குடியினரை அணைச் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டம் என்னும்  பெயரில் அப்புறப்படுத்த முயல்கிறது.    சர்தார் அணை கட்டத்தொடங்கிய 1960களில் தேவையான அளவு நிலம் கையகப்படுத்தப் பட்டுள்ளது.   ஆனால் அவை இன்னும் பயன்படுத்தப் படாமல் உள்ளது.

அவ்வாறு இருக்க அரசு இந்த கிராம நிலங்கள் ஏற்கனவே கையகப்படுத்தப் பட்டதாகக் கூறி இந்த மக்களை அப்புறப்படுத்தத் தொடங்கி உள்ளது.   அவ்வாறு கையகப்படுத்தப் பட்ட நிலங்களை  58 ஆண்டுகளாகப் பயன்படுத்தாமல் இருப்பதால் இந்த ஒப்பந்தம் காலாவதி ஆகி உள்ளது.  எனவே இங்குள்ள மக்களை அரசால் வெளியேற்றப்படுவது சட்ட விரோதமாகும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் உயர்நீதிமன்றம் நேற்று வெளியிட்ட உத்தரவில், “கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் தற்போதைய நிலையை கவனிக்கையில் அரசு இவற்றைப் பயன்படுத்தாமல் உள்ளது தெரிய வந்துள்ளது.  எனவே இந்த நிலங்களை மீண்டும் கையகப்படுத்தி அங்குள்ளவர்களை வெளியேற்றுவது தவறாகும்.  எனவே மறு உத்தரவு வரும் வரையில் அரசு நிலம் கையகப்படுத்தும் முயற்சியை ரத்து செய்ய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.