சென்னை:

குட்கா லஞ்ச விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் விவாதிக்க சபாநாயகர் அனுமதி மறுத்ததை தொடர்ந்து,  தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன், குட்கா லஞ்ச பேர ஊழலில் சம்பந்தப்பட்ட டிஜிபிக்கு மீண்டும் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது குறித்து முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

தடை செய்யப்பட்ட போதைப்பொருள் குட்காவை விற்க ரூ.40 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக வெளியான தகவல்களை தொடர்ந்து சட்டபேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

குட்கா விவகாரம் தொடர்பாக விவாதிக்க சபாநாயகர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக திமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.  அவர்களை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினரும் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் சட்டமன்ற வளாகத்தில்  செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன்,  குட்கா, பான்மசாலா விவகாரம் குறித்து பேச சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார் என்றும்,   டிஜிபிக்கு பதவி நீட்டிப்பு தரப்பட்டது குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர்,  ஜெயலலிதா முதல்வராக  இருந்தபோது போதை மற்றும் புற்றுநோயை ஏற்படுத்தும், உயிருக்கு கேடு விளைவிக்கும் பான் மசாலா, குட்கா உள்ளிட்டவற்றை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.

ஆனால், தடையை மீறி இதுபோன்ற பொருட்களை விற்பனை செய்ய அனுமதி அளித்ததாக, தமிக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மற்றும் காவல்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக, வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ள தகவல்களை ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

அதில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.14 லட்சம் லஞ்சம் வழங்கப்பட்டதாகவும், அப்போதைய டிஜிபி, காவல்ஆய்வாளர் போன்றோருக்கு  லஞ்சம் கொடுத்துள்ளதாகவும், இவ்வாறு 40 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில் குட்கா லஞ்ச ஊழலில் தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் பெயரும் உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவரது பதவி நீட்டிக்கக்கூடாது என்று தமிழக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில்,

மீண்டும் இரண்டு ஆண்டுக்கு அவரையே டிஜிபியாக தமிழக அரசு நியமனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.