சென்னை: தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி)  இரண்டாம் சட்ட முன்வடிவு, வரிவிதிப்பு சட்டங்களில் சில தளர்வுகளை செயல்படுத்துவது தொடர்பான சட்ட முன்வடிவுகளை தமிழக சட்டமன்றத்தில் இன்று வணிகவரித்துறை அமைச்சர் கே.பி.வீரமணியால்  தாக்கல் செய்யப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்று பரவலின் தாக்கம் காரணமாக  தமிழகத்தில் வணிகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால், வரி செலுத்துவதிலும் பின்னடைவு ஏற்பட்டு, அரசு வருமான இழப்பு ஏற்பட்டது.  இதன் காரணமாக,  வரி செலுத்துவது உள்ளிட்ட பல்வேறு சட்டங்களில் சில தளர்வு களை தமிழிக அரசு அவசர சட்டமாக ஏற்கனவே அறிவித்தது.

அதன்படி, தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரிச்சட்டம் (வாட்), தமிழ்நாடு பந்தைய வரிச்சட்டம், கேளிக்கை வரிச்சட்டம், ஆடம்பர வரிச்சட்டம் மற்றும் பல சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கெடு மற்றும் தமிழ்நாடு வரிவிதிப்புச் சட்டத்தின் காலக்கெடு தொடர்பான விதிகளை தளர்த்துவதற்கான திருத்தத்தை ஏற்படுத்தும் அவசர சட்டத்தையும் ஆளுநர் பிறப்பித்தார்.

2020ஆம் ஆண்டு தமிழ்நாடு வரிவிதிப்புச் சட்டங்கள் குறித்த சில வகைமுறைகளின் தளர்வு, அவசரச் சட்டமானதுடன் (தமிழ்நாடு அவசரச் சட்ட எண் 5/2020) ஆளுநரால் கடந்த மே 22ஆம் தேதி பிரகடனப்படுத்தப்பட்டது. இந்தச் சட்டம் மே 23 நாளிட்ட தமிழ்நாடு அரசு சிறப்புதழில் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், சட்டப்பேரவையின் 3வது நாள் கூட்டமான இன்று, தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவை வரி இரண்டாம் சட்ட முன்வடிவு, வரிவிதிப்பு சட்டங்களில் சில தளர்வுகளை செயல்படுத்து வது தொடர்பான சட்ட முன்வடிவையும் அமைச்சர் கே. சி. வீரமணி இன்று தாக்கல் செய்தார்.