டில்லி,

நேற்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கைவினை பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக 29 கைவினை பொருட்கள் மீதான ஜிஎஸ்டி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் கடந்த ஆண்டு (2017)  ஜூன் 1ந்தேதி முதல் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்து விதமாக பரிவர்த்தனைகளுக்கும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இதுகுறித்து ஆலோசிக்க 3 மாதங்களுக்கு  ஒருமுறை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்று வருகிறது.

அதன்படி நேற்றும் டில்லியில் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 25வது கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கைவினை பொருட்கள், பொழுது போக்கு இடங்கள் மற்றும் கட்டுமாண துறை மீதான ஜிஎஸ்டி குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது, தமிழக அரசு சார்பில்  கலந்துகொண்ட அமைச்சர் ஜெயக்குமார், கட்டுமானதுறையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.  மேலும் கூட்டத்தில்  கலந்து கொண்ட பல்வேறு  மாநில நிதி மந்திரிகள் பல்வேறு பொருட்கள் மீதான வரிகளை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித உத்தரகாண்ட் நிதியமைச்சர்,  29 கைவினைப் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரி நீக்கப்பட்டு உள்ளது, 49 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும், பொழுதுபோக்கு கேளிக்கை பூங்காக்களில் டிக்கெட் கட்டண வரி 28 சதவிதத்தில் இருந்து 18 சதவிதமாக குறைக்கப்பட்டு உள்ளதாவும் கூறினார்.

இந்த வரி குறைப்பு  முடிவுகள் வரும்  25-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என அருண் ஜெட்லி கூறி உள்ளார்.

பெட்ரோல் மற்றும் டீசலை ஜி.எஸ்.டி வரிவிதிப்பின் கீழ் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு பதில் அளித்த மத்திய  அமைச்சர் அருண்ஜெட்லி, அது தொடர்பாக தற்போது  ஆலோசிக்கப்ப டவில்லை, அடுத்த கூட்டத்தின் போது ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.