டில்லி: டிசம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.29 லட்சம் கோடி, இது 13சதவிகிதம் அதிகரிப்பு என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 2021 டிசம்பரில் ஜிஎஸ்டி வருவாய் 13 சதவீதம் அதிகரித்து ரூ.1.29 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது, முக்கியமாக பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் ஏய்ப்பு எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக ஜிஎஸ்டி வசூல் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த வசூலானது 2021ம் ஆண்டு நவம்பரில் வசூலிக்கப்பட்ட  ரூ. 1.31 லட்சம் கோடியை விடக் குறைவாக இருந்தபோதிலும், டிசம்பர் மாதம் தொடர்ச்சியாக ஆறாவது மாதமாக விற்பனை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகள் மூலம் ரூ. 1 லட்சம் கோடிக்கு மேல் வருவாய் கிடைத்துள்ளது என்றும், கடந்த 2020 டிசம்பர் வசூலுடன் ஒப்பிடும்போது 13 சதவிகிதம் அதிகம் என்றும் தெரிவித்து உள்ளது.

“டிசம்பர் 2021ல் சேகரிக்கப்பட்ட மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,29,780 கோடி, இதில் சிஜிஎஸ்டி ரூ.22,578. எஸ்ஜிஎஸ்டி-ரூ.28,658 கோடி,  ஐஜிஎஸ்டி-ரூ.69,155 கோடி (பொருட்களின் இறக்குமதி வரி ரூ.37,527 கோடி உள்பட)  செஸ்- ரூ.9,389 கோடி ( பொருட்களின் இறக்குமதி வரி ரூ.614 கோடி உட்பட) அடங்கும்.

இது  கடந்த ஆண்டு (2020) டிச., மாதம் வசூல் ஆன ரூ.1.15 லட்சம் கோடியை விட, இது 13 சதவீதம் அதிகம் ஆகும். தொடர்ந்து 6வது மாதமாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டி உள்ளது.

இவ்வாறு  நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.