குஜராத் மாநில பாடத்திட்டத்தில் பயின்ற 10 ம் வகுப்பு மாணவர்களுக்கான 2022ம் ஆண்டு தேர்வு முடிவுகள் ஜூன் 6 ம் தேதி வெளியானது.

மொத்தம் 772771 தேர்வு எழுதிய நிலையில் 503726 பேர் தேர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

தேர்வு எழுதியவர்களில் 59.92 சதவீத ஆண்களும் 71.66 சதவீத பெண்களும் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். மொத்தத்தில் 65.18 சதவீத மாணவர்களே பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.

இதில் அரசு உதவி பெரும் 121 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்ற புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது.

‘ஜீரோ’ தேர்ச்சி பெற்றுள்ள இந்த பள்ளிகளுக்கான அரசு உதவித்தொகை நிறுத்தப்படும் என்று தெரிகிறது.

குஜராத் மாநில கல்வித் துறை மாதம் தோறும் ரூ. 3000 அதாவது ஆண்டொன்றுக்கு ரூ. 36000 உதவித் தொகை வழங்குகிறது. இந்த தொகை பெரும்பாலும், மின் கட்டணம், வரி மற்றும் இன்டர்நெட் உள்ளிட்ட பயன்பாட்டு கட்டங்களை செலுத்த பயன்படுகிறது.

30 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சிபெறும் பள்ளிகளுக்கு இந்த உதவித் தொகை நிறுத்தப்படும் தேர்ச்சி விகிதம் குறைவு தொடர்பாக இதுவரை சுமார் 1500 பள்ளிகள் குஜராத் முழுவதும் மூடப்பட்டுள்ளன. இதனால் கிராமப்புற மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இந்த ஆண்டு வெளியான தேர்ச்சி பட்டியலில் 1007 பள்ளிகள் 30 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சி பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த கல்வித் துறை அதிகாரிகள் இந்த ஆண்டு அரசு உதவித் தொகை நிறுத்த வாய்ப்பில்லை என்று கூறியுள்ளனர். ஆனால் இதுதொடர்பாக எழுத்துபூர்வமாக எந்த உத்தரவும் வெளியாகாததால் அரசு உதவிபெறும் பள்ளிகள் கலக்கத்தில் உள்ளது.