திருவனந்தபுரம்: மோடி தலைமையிலான மத்தியஅரசு பதவி ஏற்றபிறகு, எரிபொருட்களின் விலை குறித்து, எண்ணை நிறுவனங்களே முடிவெடுக்க அனுமதி அளித்தது. அன்றுமுதல், நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, வாகன எரிவாயுக்களின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது.

தினசரி விலை மாற்றங்கள் மட்டுமின்றி அவ்வப்போது அதிரடியாக விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இதற்கு காரணமாக கச்சா எண்ணை விலை உயர்வே காரணம் என்று கூறப்பட்டாலும், மோடி அரசின் அதீதமான வரி விதிப்பு காரணமாக, விலை ஏற்றப்பட்டு வருகிறது.

கடந்த ஓராண்டாக ஊரடங்கால் முடங்கிக் கிடக்கும் தொழில் துறைகள் மீண்டும் புத்துயிர் பெறவும், மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பிடவும் வாகனப் போக்குவரத்தே உயிர் நாடியாக திகழ்கிறது.  ஆனால், அதிகரித்துவரும் பெட்ரோல், டீசலின் விலையானது அத்தியாவசியப் பொருட்களின் விலையையும் அதிகரிக்கச் செய்துள்ளது. ஆனால், இதை கிஞ்சித்தும் கண்டுகொள்ளாமல், வரிச்சுமையை மக்களின் தலையில் சுமத்தி வருகிறது.

இதன் காரணமாக,  அத்தியாவசியப் பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது.  மோடி அரசின் மெத்தனமான போக்கு காரணமாக ஏற்கனவே, பண மதிப்பிழப்பு,  ஜிஎஸ்டி வரி போன்றவைகளால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து உயர்ந்து வரும் எரிபொருள் விலை உயர்வும் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகின்றன.

எரிபொருள் விலை உயர்வு குறித்து, காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான, சசிதரூர் எம்.பி., ஆதாரங்களுடன் அருமையாக விளக்கி, மோடி அரசின் மக்கள் விரோத போக்கை தோலூரித்து காட்டியுள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிப்பு மூலம்  மோடி அரசு கொள்ளையடிக்கிறது என்பதை, ஆதாரங்களுடனான விளக்கம் படங்களுடன் விவரித்து உள்ளார்.

அதில், மோடி  அரசாங்கம் இதுவரை கலால் வரியை கிட்டத்தட்ட 11 முறை உயர்த்தியது, இப்போது, ஏஐடிசியும் ( Automatic Identification and Data Capture – தானியங்கி அடையாளம் மற்றும் தரவு பிடிப்பு)  உயர்த்தப்பட்டு உள்ளது. 

மோடி தலைமையிலான மத்தியஅரசு கடந்த 2014 ஆம் ஆண்டு பதவி ஏற்றது முதல்,  வரி விகிதத்தை உயர்த்தி வருகிறது.  மத்திய அரசு அமல்படுத்தி உள்ள ஜிஎஸ்டியில் பெட்ரோலியப் பொருட்களைச் சேர்த்திருந்தால், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்ற எரிபொருட்களின் விலை உயர்ந்திருக்க வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டியில் எரிபொருட்கள் சேர்க்கப்பட்டிருந்தால், அதன் விலை எவ்வளவு இருக்கும் என்பதையும் சுட்டிக்காட்டி உள்ளார்.

மேலும், மோடி அரசு அடிக்கும் மற்றொரு கொள்ளையையும் விவரித்துள்ளார்.

அதில், பாஜக அரசுக்கு  வக்காலத்து வாங்குபவர்களும், அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் மாநிலங்களும், எரிபொருள் விலை உயர்வுக்கு  யுபிஏ (காங்கிரஸ் தலைமையிலான அரசு)  அரசாங்கங்கம் பொறுப்பாளிகள் என்று கூறுகின்றனர், ஆனால் உண்மை என்னவென்றால்,

இந்த விலை உயர்வுகளுக்கு காரணம் பாஜக தலைமையிலான  தேசிய ஜனநாயக கூட்டணி அரசுதான்..  என்று தெரிவித்துள்ளதுடன், அதற்கான விவரங்களையும் பட்டியலிட்டுள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணி அரசின்போது, கடந்த 2014ம் ஆண்டு ஜூன் என்ன விலை இருந்தது, மோடி அரசின்  வரி விதிப்பு காரணமாக தற்போது என்ன விலை என்பதை குறிப்பிட்டுள்ளதுடன், சுமார்  200% வரை வரி  உயர்த்தப்பட்டு உள்ளதாகவும்,  டீசலுக்கான வரி விதிப்பு 600% வரை உயர்த்தப்பட்டு உள்ளது என்பதையும்  சுட்டிக்காட்டியுள்ளார்.

கொள்ளையடிக்கும் மோடி அரசாங்கத்தை இந்தியா இன்னும் எவ்வளவு காலம்தான்  வேடிக்கை பார்க்க வேண்டும்?  என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.