சென்னை: தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களின் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதி முடிவடையும் நிலையில், அதற்கான அவகாசத்தை மேலும் ஒருவாரம், அதாவது  டிசம்பர் 7ஆம் தேதி நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது.

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் கீழ் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளில்  13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு முறையான ஆசிரியர்களை நியமனம் செய்யாமல், காண்டிராக்ட் முறையில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  ஆனால், நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது.

இது தொடர்பாக டிஆர்பி வெளியிட்டிருந்த அறவிப்பில்,     அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மாதம் வெளியிட்டது. அதற்கான தேர்வு 2024 ஜனவரி 7ந்தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக எழுத்து தேர்வுக்கு, நவ. 1 முதல் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பின்னர்,  காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை 2,582 ஆக உயா்த்தி ஆசிரியா் தோ்வு வாரியம் அண்மையில் அறிவித்தது. அதன்படி,  சென்னை மாநகராட்சியில் 86 பணியிடம், பள்ளிக் கல்வியில் 52, ஒருங்கிணைந்த மாற்றுத் திறனாளிகள் நலத் துறையில் 144, தொடக்கக் கல்வித் துறையில் 78 என மொத்தம் 360 பணியிடங்கள் கூடுதலாக சோ்க்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 7-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இணையவழி விண்ணப்பம் பதிவேற்ற நவ.30-ம் தேதி கடைசி நாளாக அறிவித்த நிலையில், டிசம்பர் 7-ம் தேதி மாலை 5 மணி வரை அவகாசத்தை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது.