சென்னை: பல்லாவரம் அருகே உள்ள பரங்கிமலையில், அரசு நிலங்களை பொதுமக்கள், தனியார் மற்றும் மத அமைப்புகள் ஆக்கிரமித்துள்ள நிலையில், ஆக்கிரமிக்கட்ட நிலங்களை, ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து ரூ.2500 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டு உள்ளது. அதில் உள்ள கட்டிங்களை இடித்து அகற்றும் பணியில் வருவாய்த்துறை ஈடுபட்டுள்ளது.

சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட் மற்றும் கன்டோன்மென்ட் பல்லாவரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வணிக நிறுவனங்களை, நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகு, தமிழக வருவாய்த் துறையினர் இடிக்கத் தொடங்கி உள்ளனர். சுமார் 2500 கோடி மதிப்பிலான நிலங்களை மிட்கும் பணியை வருவாய்த்துறை தொடங்கி உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு நிலங்கள் அரசியல்வாதிகள் மற்றும் நில புரோக்கர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. மேலும், பல நிலங்களுக்கு  அரசு அதிகாரிகள் போலி பட்டாக்கள்  தயார் செய்து விற்பனைகளும் செய்யப்பட்டு வருகின்றன. இதுபோன்ற ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களை மீட்க வேண்டும் என பல ஆண்டு களாக சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். நீதிமன்றமும் பல முறை உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், செயின்ட் தாமஸ் மவுண்ட் கிராமம் மற்றும் மலைப்பகுதிகள், ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள், மதஅமைப்பினர் மற்றும் பொதுமக்களால் ஆக்கிரிமிக்கப்பட்டு உள்ளது. இதை மீட்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறி வந்தனர். இந்த நிலையில், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான் கடந்த  2022ம் ஆண்டு செங்கல்பட்டு கலெக்டராக  ராகுல் நாத் இருந்தபோது, பரங்கிமலை பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது, அந்த பகுதியில் உள்ள பல கோடி மதிப்புள்ள அரசு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதையும், பலர் அரசு நிலத்தை குத்தகைக்கு எடுத்து, அதில் கட்டிடம் கட்டி, வருவாய் பார்த்து வந்ததும், பிரதான பகுதிகளில் உள்ள இந்த நிலங்களை மற்றவர்களுக்கு அதிக விலைக்கு விற்றுள்ளதும் கண்டு பிடித்தார். பல குத்தகைதாரர்கள்  பல தசாப்தங்களாக குத்தகை செலுத்தவில்லை என்பதையும் கண்டறிந்து நடவடிக்கை எடுத்தார். தொடர்ந்து, ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து நிலத்தை மீட்கும் வகையில், ஆக்கிரமிப்பாளர்கள்,  பல குத்தகைதாரர்களுக்கு நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை எடுத்தார். ஆவர்கள் யாரும் குறிப்பிட்ட  நேரத்தில் இடத்தை காலி செய்யவில்லை.

இதனால்,  ஆக்கிரமிப்பாளர்களுக்கு கலெக்டர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதை எதிர்த்து அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர், அதை யொட்டி அவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மேல்முறையீடு செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். இருப்பினும், விசாரணையின் போது, வருவாய்த் துறையினர் அவர்கள் அரசாங்க நிலத்தை சட்டவிரோதமாக வைத்திருப்பதை உறுதிசெய்தனர், மேலும் 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் கடுமையான எதிர்ப்பின் மத்தியில் இந்த ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் சீல் வைக்கத் தொடங்கியது.

இதில் தனியார் வங்கிகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், விளையாட்டுக் கழகங்கள், வர்த்தகர்கள் சங்க கட்டிடங்கள், நூற்றுக்கணக்கான கடைகள் மற்றும் பிற வணிக நிறுவனங்கள் என பல அரசியல் கட்சியினரின் கைங்கர்யமும் இருந்து தெரிய வந்தது. இதையடுத்து, நிலத்தை மீட்பதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன. இதுதொடர்பான வழக்குகளும் பாய்ந்தன. இதையெல்லாம் கடந்த தற்போது மீண்டும் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து நிலத்தை மீட்கும் பணியை வருவாயத்துறை தொடங்கி உள்ளது.

சுமார், 2,500 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 15 ஏக்கர் அரசு நிலம், இந்த ஆண்டு இதுவரை மீட்கப்பட்டு, பல்லாவரம் வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளூர் காவல்துறையினரின் உதவியுடன் இங்கு கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த இடங்களில்   சாலை விரிவாக்கம், சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) பணிகள் மற்றும் புதிய அரசு கட்டிடங்கள் போன்ற பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு இந்த நிலம் பயன்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏற்கனவே கடந்த ஆகஸ்டு மாதம் ரூ.100 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.2500 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டு உள்ளன, இதுபற்றி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் திரு.ராகுல் நாத்,  பல்லாவரம் வட்டம், செயின்ட் தாமஸ் மவுண்ட் கிராமத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 41,952 சதுர அடி நிலம் இன்று மாவட்ட நிர்வாகத்தால் மீட்கப்பட்டுள்ளது

இந்த நிலமானது வருவாய் பதிவேட்டில் காலம் கடந்த குத்தகை நிலம் எனத் தாக்கலாகியுள்ளது. இதனை கோயில் பயன்பாட்டிற்கு தற்காலிகமாகப் பயன்படுத்திக்கொள்ள காசிவிஸ்வநாதர் தேவஸ்தானத்திற்கு தமிழக அரசால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. பின்னர் இவ்விடம் கோயில் பயன்பாட்டிற்கு பயன்படாமல் பிற நபர்களால் ‘வன்னியர் சங்கக் கட்டிடம்’ சங்கக் கட்டிடம்’ என்ற பெயரில் கட்டிடம் கட்டி ஆக்கிரமிக்கப்பட்டதோடு அதன் மூலம் அரசிற்கு குத்தகை தொகை எதுவும் செலுத்தப்படாமலும் இருந்து வருகிறது.

எனவே, மேற்படி அரசு நிலத்தில் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளவற்றை அகற்றிட தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டம் 1905 பிரிவு 7 மற்றும் 6- ஆகியவற்றின் கீழான அறிவிக்கை பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகம் மூலம் 28-11-2022 மற்றும் 6-3-2023 ஆகிய தேதிகளில் வழங்கப்பட்டன. ஆக்கிரம்பு செய்தவர்கள் மேற்படி ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ளாத நிலையில் வருவாய் நிலையாணை எண்.29-ன் பிரிவு 13-ன் படி, மேற்படி ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட சுமார் ரூபாய் 100 கோடி மதிப்புள்ள. சுமார் ஒரு ஏக்கர் நிலத்தினை பல்லாவரம் வட்டாட்சியர் மூலம் 18-8-2023 அன்று அரசின் வசம் கொண்டு வரும் பொருட்டு பூட்டி சீலிட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என கூறியிருந்தார்.

இதற்கிடையில் கடந்த இரு வாரத்திற்கு முன்பு அறப்போர் ஆக்கிரமிப்பு நிலம் குறித்து சில தகவல்களை தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தது.  சென்னை பரங்கிமலை கிராமத்தில் எந்த நிலம் யார் பெயரில் பட்டா இருக்கிறது என்ற விவரங்களை வருவாய்த்துறை இணையதளத்தில் இருந்து அகற்றியது ஏன்? என்று  அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பியது.

மேலும் பரங்கிமலையில் 250 கோடி மதிப்புள்ள அரசு நிலங்கள் அதிகாரிகள் உதவுயுடன் தனியாருக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டி நவம்பம் 22ந்தேதி வீடியோ அறப்போர் இயக்கம் சார்பில் ஜெயராம் வெங்கடேசன்  வெளியிட்டிருந்தார்.. இந்த வீடியோ வைரலானது.

அந்த வீடியாவில் ஜெயராம் வெங்கடேசன் பேசுகையில, “தமிழ்நாட்டில் அத்திப்பட்டி கிராமம் மேப்பை விட்டே காணாமல் போனதாக சிட்டிசன் படத்தில் பார்த்திருப்பீர்கள்.. அதே மாதிரி சென்னையில் ஒரு அத்திப்பட்டி இருக்கிறது. சென்னையின் அத்திப்பட்டி பரங்கிமலை கிராமத்தை காணவில்லை. தமிழக வருவாய் துறையினர், பரங்கி மலை கிராமத்தில் உள்ள நிலங்கள் சர்வே நம்பர் படி யார் பெயரில் பட்டா உள்ளது என்கிற முழுமையாக தகவலை இணையதளத்தில் இருந்தே தூக்கிவிட்டனர். நீங்கள் வருவாய் துறையின் இணையதளத்தில் அனைத்து கிராமங்களின் பட்டாவையும் இணையதளத்தில் பார்க்க முடியும். ஆனால் நீங்கள் பரங்கிமலை கிராமத்தை மட்டும் பார்க்க முடியாது. ஏன் பரங்கிமலையை அத்திப்பட்டியை மாற்றினார்கள் என்றால், இங்கு நிறைய அரசு நிலங்கள் உள்ளன.

சுதந்திரத்திற்கு முன்பு பிரிட்டீஸ் அரசு 50 வருடம், 100 வருடம் லீஸ் கொடுத்த நிறைய இடங்கள் எல்லாம் இதில் இருக்கிறது. இந்த இடங்கள் எல்லாம் அரசாங்கத் திற்கு வர வேண்டிய நிலங்கள் ஆகும்.   அந்த நிலங்களை எல்லாம் ஆட்டையை போடுவதற்காக, ஏற்கனவே நிறைய பேர் ஆட்டையை போட்டுவிட்டார்கள். இது வெளியில் தெரியக்கூடாது. எது எதெல்லாம் அரசாங்க நிலம் என்பது வெளியே தெரியக்கூடாது என்பதற்காக வருவாய்துறை மக்களிடம் இருந்து முழுமையாக மறைத்துள்ளது. அதற்காக சென்னை பரங்கிமலை கிராமத்தில் எந்த நிலம் யார் பெயரில் பட்டா இருக்கிறது என்ற விவரங்களை வருவாய்த்துறை இணையதளத்தில் இருந்து அகற்றி உள்ளது.

பரங்கிமலை கிராமத்தில் பிரிட்டீஸ் அரசு லீசுக்கு கொடுத்த பல இடங்கள் மீண்டும் அரசுக்கு வந்து சேரவில்லை. அந்த அரசு நிலங்களின் சர்வே நம்பர்களை குறிப்பிட்டு இதை யாருக்கும் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என 2015ம் ஆண்டு ஆலந்தூர் தாசில்தார் பத்திரப்பதிவு துறைக்கு கடிதம் எழுதினார். ஆனால் அதன் பின்னரும் பத்திரப்பதிவுகள் நடந்துள்ளன.

ஆனால் உத்தரவிற்கு பின்னர் இந்த பதிவுகளை செய்த சப் ரிஜிஸ்தாரர் உமா மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்று  தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்தான், இதுவரை  ஆக்கிரமிப்பாளர்களிடம் மீட்கப்பட்ட  ரூ.2500 கோடி மதிப்பிலான நிலங்களில் உள்ள கட்டிங்களை இடித்து அகற்றும் பணியில் வருவாய்த்துறை ஈடுபட்டுள்ளது.