டெல்லி: நாடு முழுவதும் இன்னும் இரண்டு ஆண்டுகளில், ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் நேரடியாகவே டோல் கட்டணம் வசூலிக்கப்படும் அதனால் சாலைகளில்,  டோல்கேட்களே இருக்காது  என மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்

இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்கரி,  இந்தியாவில் இன்னும் இரண்டு ஆண்டுகளில்  ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் நேரடியாகவே வசூலிக்கப்படும் முறை அமலுக்கு வந்து விடும். அதன்பிறகு நெடுஞ்சாலைகளில், சுங்க வரி வசூலிக்கும்  டோல்கேட்டுகள் எனப்படும் சுங்க கட்டணம் சாவடிகள்  இருக்காது.  நாடு முழுவதும், அதிகரித்து வரும் வாகன போக்குவரத்தால் இத்தகைய டோல்கேட்டில் வரி செலுத்த நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியது சூழல் ஏற்படுகிறது. இந்த கஷ்டம் விரைவில் தீரும் வகையில், பாஸ்ட் டிராக் எனப்படும் தானியங்கி கட்டணம் செலுத்தும் முறை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இதில் சில குளறுபடிகள் தொடர்வதால், ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை புகுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் வாகனங்கள் பணம் செலுத்துவதற்கு டோல் பிளாசாக்களில் நிறுத்தவோ அல்லது காத்திருக்கவும் அவசியமில்லை . இது வாகனங்கள் செல்லும் தூரத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டணத் தொகை தானாகவே, அவர்களது வங்கிக்கணக்கில் இருந்து எடுக்கப்பட்டு வரும். அதற்கான திட்டத்தை மத்தியஅரசு முன்னெடுத்து வருகிறது. இனி வரும்  அனைத்து புதிய வாகனங்களும் ஜி.பி.எஸ் அமைப்புகளுடனேயே வெளிவரும் என்றும் கூறினார்.