டில்லி: மத்தியஅரசு மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்குவதற்காக ரூ.40ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறி உள்ளார்.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கத்தால் ஏற்படும் வருவாய் இழப்பிற்கு, மத்திய அரசு இழப்பீடு வழங்கி வருகிறது. அதன்படி, தற்போது மொத்தம் ரூ.40ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பு நிதியாண்டில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, ஜி.எஸ்.டி., கூடுதல் வரி வசூல் வாயிலாக, 1 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு வழங்க மதிப்பிடப்பட்டிருந்தது. இத்துடன், திரும்பப் பெறும் கடன் அடிப்படையில் 1.59 லட்சம் கோடி ரூபாய் வழங்க 43வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி நடப்பு நிதியாண்டில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மொத்தம் 2.59 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு கிடைக்கும் என, மதிப்பிடப்பட்டிருந்தது.

இந்த தொகையில் ஜூலை மாதம் ரூ. 75 ஆயிரம் கோடி ரூபாய் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது.

தற்போது, மேலும் 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி மாநிலங்களுக்கு மொத்தம், 1.15 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி., இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

எஞ்சிய தொகை தவணையில் தரப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.