சென்னை: கவர்னரின் குடியரசு தின தேநீர் விருந்தை முதலமைச்சர் ஸ்டாலின் புறக்கணிப்பு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கவர்னரின் தேநீர் விருந்தில் முதலமைச்சர் பங்கேற்கமாட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் ஆட்சி செய்து வரும் திமுக அரசுக்கும், மாநில கவர்னருக்கும் இடையேயான மோதல் போக்கு தீவிரமடைந்துள்ள நிலையில், கவர்னருக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகளை போட்டுள்ளது. இந்த நிலையில், நாளை குடியரசு தினத்தை யொட்டி, கவர்னர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்க மாட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
குடியரசு தினத்தன்று ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நடைபெறுவது வழக்கம். அதன்படி கவர்னர் மாளிகையில் இருந்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் உள்பட பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த விருந்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி கலந்துகொள்ளாது என அறிவித்த நிலையில், திமுக கூட்டணி கட்சிகளும் கவர்னர் விருந்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளன. இந்த நிலையில், தற்போது மாநில முதல்வரான ஸ்டாலினும் கவர்னர் விருந்தை புறக்கணிப்பதாக தெரிவித்து உள்ளார்.
மதுரையில் நாளை முதல்வருக்கு டங்ஸ்டன் சுரங்க எதிர்பாளர்களால் பாராட்டு விழா நடைபெற உள்ளதால், அதில் கலந்துகொள்ள மதுரை செல்வதால், கவர்னின் தேநீர் விருந்தில் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் நாளை காலை நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விழா முடிந்த பிறகு மதுரை அரிட்டாபட்டி புறப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கவர்னர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கமாட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது.